“பருத்தி வீரன் க்ளைமாக்ஸ்ல என்னால பேசவே முடில!"- பிரியாமணி #15 years of Paruthiveeran

‘பருத்தி வீரன்’ வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகள் ஆகின்றன. இன்றைக்கும் கல்ட் படங்களில் அந்தப் படத்திற்கு எப்பவும் தனி இடம் உண்டு. கார்த்தி முதல் படத்திலேயே தனிப்பட்ட கதாநாயகன் அந்தஸ்து கிடைக்கவும் இதுதான் காரணம். கார்த்தியை செதுக்கியதில் அமீருக்கு பெரும் பங்கிருக்கிறது. அதில் முத்தழகாக நடித்து, தேசிய விருது பெற்று மொத்த தமிழ் சினிமாவையையும் திரும்பிப் பார்க்க வைத்த ப்ரியாமணியிடம் பேசினேன். மும்பையில் இடைவிடாத படப்பிடிப்பில் இருந்தாலும் கூட ‘பருத்தி வீரன்’ நினைவுகளில் கரைந்தார்.

”பருத்திவீரன்’ வெளியாகி 15 வருஷம் ஆச்சுனு நம்பவே முடியல. என் கரியரில இப்படி ஒரு படம் அமைஞ்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னனும் என்னை பார்க்கறவங்க ‘முத்தழகு’னு தான் கூப்பிடுறாங்க. அமீர் சாருக்குத்தான் நன்றி சொல்லணும். இந்த மாதிரி ஒரு படம் என் கரியர்ல அமையறது ரொம்பவே ஸ்பெஷல்னு தான் சொல்லணும்.

தேனியிலதான் பயங்கர வெயில்ல ஒரு பாறை மேல உட்கார வச்சு ஓப்பனிங் பாடலை ஷூட் பண்ணினாங்க. அப்ப கேரவன் எல்லாம் வைக்கல. ஸோ, ஷாட் பிரேக்ல நாங்க ஓய்வெடுக்கணும்னா கூட பக்கத்து உள்ள வீடுகள்ல தான் போய் உட்காரணும். ‘ஃபுல் அடிச்சும் போதை இல்லை.. பீர் அடிச்சும் கிக் இல்லை.. கண்ணை மூடினா கனவுல நீதானே.. வேற யார் வருவார்..” மாதிரி ரசிக்க வைக்கற டயலாக்கை எல்லாம் அமீர் சார் எழுதியிருப்பார்.

ப்ரியாமணி

என் வாழ்க்கையில முதல்முறையா சொந்தக் குரல்ல பேசின படம் இதான். பெங்களூருவுல உள்ள எங்க வீட்டுக்கு வந்திருக்கப்பதான் அமீர் சார்கிட்ட இருந்து போன் வந்துச்சு. ‘நீங்க சென்னைக்கு வரணும். டப்பிங் இருக்கு’ன்னாங்க. ஆச்சரியமாகிட்டேன் அப்பத்தான் டப்பிங் ஸ்டூடியோவையே நேர்ல பாக்குறேன். சவுண்ட் என்ஜினீயர் வாய்ஸ் டெஸ்ட் பண்ணச் சொன்னதும், ‘ஒன் டு த்ரீ..’னு சொல்லவும்.. அமீர் சார் சிரிச்சுக்கிட்டே ‘டயலாக்கை’ சொல்லுங்கன்னார். நல்லா ஞாபகம் இருக்கு. 13 நாட்கள்ல டப் பண்ணினேன். அதுவும் க்ளைமாக்ஸ் சீன் வரும் போது, என்னால பேசவே முடியல. அழுதுட்டேன். நாலு நாளும் அழுதேன் பேச முடில.. அப்புறம் எங்க அம்மாதான் ‘என்னிக்கு இருந்தாலும் நீதான் பேசியாகணும்.’னு ஆறுதல் பண்ணி பேச வச்சாங்க.

எனக்கு தேசிய விருது கிடைக்கறதுக்கு முன்னாடி, ஓஸன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல்ல இருந்து விருது கிடைச்சது. அந்த விழாவுக்கு என்னால போக முடியல. கார்த்தியும், ராம்ஜி சாரும் போயிருந்தாங்க. அந்த ஃபெஸ்டிவல்ல படம் பார்த்த அத்தனை வெளிநாட்டினரும் முத்தழகை சந்திக்கணும்னு சொல்றாங்கனு கார்த்தி சொன்னதோட, அந்த விருதையும் எனக்காக வாங்கிட்டு வந்து கொடுத்தார். ஒருநாள் காலையில ஆறரைக்கு வீட்ல தூங்கிட்டு இருந்தப்போ எங்க அப்பா என்னை எழுப்பி ‘உனக்கு நேஷனல் அவார்டு கிடைச்சிருக்குனு வாழ்த்து சொன்னாங்க. அப்புறம் டி.வி.யில நியூஸ் வந்த பிறகு வாழ்த்துக்கள் குவிய ஆரம்பிச்சது..” என நெகிழ்ந்து மகிழ்கிறார் ப்ரியாமணி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.