மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “பா.ஜ.க-வால் தமிழகத்தை ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது” என்றார். இவரின் பேச்சு இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழக பா.ஜ.க மாநகராட்சியில் 15 வார்டுகள், நகராட்சியில் 56 வார்டுகள் மற்றும் பேரூராட்சியில் 230 வார்டுகள் என மொத்தம் 301 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது.
தமிழக தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து பா.ஜ.க ஐ.டி பிரிவு தலைவர் அமித் மல்வியா ராகுல் காந்தியை விமர்சனம் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் ஆட்சி செய்யாது என்று கடந்த சில நாள்களுக்கு முன்பு ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் கூறினார். ஆனால், நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் ராகுல் காந்தியின் கருத்துகளைப் பொய்யாக்கியிருக்கிறது என்று நம்புகிறேன். தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் பா.ஜ.க தற்போது 3-வது பெரிய கட்சியாக உள்ளது. இதுவரை வெற்றி பெறாத பகுதிகளில் எல்லாம் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது” என பதிவிட்டுள்ளார்.