பிப். 24 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாநில அரசு உத்தரவு!

கர்நாடக மாநிலம் ஷிவமொகாவில், நாளை வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின்
ஷிவமொகா
மாவட்டத்தில், பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த இளம் நிர்வாகி ஹர்ஷா, அண்மையில் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அங்கு தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த படுகொலைக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவத்தால், அங்கு வன்முறை ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷிவமொகா நகர பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டது. எனினும், ஹர்ஷா கொலைக்கு நீதி கேட்டு நகரின் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டங்களில் பங்கேற்ற சிலர் வன்முறையிலும் ஈடுபட்டனர். கல்வீச்சு சம்பவங்கள், வாகனங்களுக்கு தீ வைப்பு போன்ற சம்பவங்களும் நடந்தன. இதனால் தொடர்ந்து பதற்றம் நிலவியது. இதை அடுத்து மாவட்டம் முழுவதும் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், ஷிவமொகா மாவட்டத்தில் அமலில் உள்ள 144 தடை உத்தரவு மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாகவும், காலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரை மட்டுமே மக்கள் நடமாட அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இந்த நடைமுறை வெள்ளிக்கிழமை காலை வரை அமலில் இருக்கும் எனவும், அதுவரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை எனவும் துணை கமிஷனர் தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே, ஹர்ஷா கொலை வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 21 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ஷிவமொகா எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.