மாநிலங்களவை உறுப்பினராக, தெலுங்கானா மாநில சார்பில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு வாய்ப்பு உள்ளதாக, அம்மாநில அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
டிஆர்எஸ் கட்சியின் சார்பில் போட்டியிட மூன்று மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளதால், அதில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு சந்திரசேகரராவ் வாய்ப்பு வழங்குவார் என்றும் அம்மாநில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களை கவர்ந்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், அவ்வபோது அரசியல் சம்பந்தமான வாதங்களையும் முன்வைத்து வருகிறார்.
மேலும், தெலுங்கு திரை உலகில் நடிகர் பிரகாஷ்ராஜ் என்று தனி ரசிகர்களும் ஆதரவாளர்களும் உண்டு. தெலுங்கு திரையுலக நடிகர் சங்க தலைவர் பதவிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிட்டு, நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணுவிடம் தோல்வி அடைந்தார்.
தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியை விமர்சித்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ்-க்கு தெலுங்கானா ஆளும் கட்சியான டிஆர்எஸ் கட்சியில் அவர் இணைந்து கொண்டால் அவரை மாநிலங்களவையில் பாஜகவை தீவிரமாக விமர்சிக்க வாய்ப்பு கொடுக்க உள்ளதாக, அம்மாநில அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் பாஜக-வுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத ஒரு மூன்றாவது அணியை உருவாக்கி வரும் நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் தெலுங்கானாவின் டிஆர்எஸ் ஆளும் கட்சி அவருடைய கட்சியான கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனை உறுதிப்படும் விதமாக மகாராஷ்டிரா மாநில முதல்வரை சந்தித்த முதல்வர் சந்திரசேகர ராவ், திடீரென நடிகர் பிரகாஷ்ராஜையும் சந்தித்து உள்ளார். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.