பிரான்ஸ் நாட்டில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரான்சிடம் இருந்து சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாயில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க 2016ஆம் ஆண்டில் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, 2020ஆம் ஆண்டில் முதன்முறையாக 5 போர் விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு விமானப் படையில் சேர்க்கப்பட்டன.
அதன் பிறகு பல குழுக்களாக ரஃபேல் விமானங்களை பெற்ற நிலையில், பிரான்ஸ் விமான படை தளத்தில் இருந்து கிளம்பிய மேலும் 3 விமானங்கள் நேரடியாக நேற்று இந்தியா வந்துசேர்ந்தன. அங்கிருந்து இடைநில்லாமல் பறந்து வந்த விமானங்களுக்கு ஐக்கிய அரபு அமீரக விமானப்படை நடுவானில் எரிபொருள் நிரப்பியது.
ஒப்பந்தப்படி இதுவரை 35 விமானங்களை பெற்ற நிலையில், கடைசி விமானம் வரும் மார்ச் அல்லது ஏப்ரலில் இந்தியா வந்தடையும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.