லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பெற்றோர்கள் ஓட்டளித்தால், அவர்களின் பிள்ளைகளுக்கு 10 மதிப்பெண்கள் அளிக்கப்படும் என லக்னோவில் உள்ள கல்லூரி அறிவித்துள்ளது.
உ.பி.,யில் சட்டசபை பொதுத்தேர்தல் நடக்கிறது. இன்று (பிப்.,23) நான்காம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த நிலையில் ஓட்டுப்பதிவை ஊக்குவிக்கும் வகையில், லக்னோவில் உள்ள கிறிஸ்ட் சர்ச் கல்லூரி ஒரு ஆச்சரியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்த தேர்தலில் பெற்றோர்கள் ஓட்டளித்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு 10 மதிப்பெண் வழங்கப்படும் என அக்கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கல்லூரி முதல்வர் ராகேஷ் குமார் கூறுகையில், ‛ஓட்டளிப்பது ஒரு இன்றியமையாத கடமை என்பதை அனைவருக்கும் உணர்த்தவும், 100 சதவீத ஓட்டளிப்பை உறுதி செய்யவும் இதுபோன்ற முடிவை எடுத்துள்ளோம். இத்திட்டத்தின் மூலம் மதிப்பெண்கள் குறைவாக பெற்ற மாணவர்கள் தேர்ச்சி பெற உதவும்’ எனக் கூறினார். ஓட்டளிப்பதை ஊக்குவிக்க கல்லூரி நிர்வாகம் எடுத்துள்ள இந்த முடிவிற்கு மாணவர்கள், பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Advertisement