உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தனது படைகளை ரஷ்யா குவித்து வருகிறது. சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் குவிக்கப்பட்டனர். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைனை சேர்ப்பதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், அதற்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய படைகள் எல்லையில் குவிக்கப்பட்ட நிலையில், நேட்டோ படைகளும் குவிக்கப்பட்டுள்ளதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகை செய்யும் எனவும் எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.
இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர்
இம்ரான் கான்
2 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அந்நாட்டு தலைநகர் மாஸ்கோவில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைக்காட்சி விவாதத்தில் பங்குபெற விரும்புவதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி.
சசி தரூர்
, யுத்தம்- யுத்தம் என்பதைவிட வாயும்-வாயும் ( பேச்சுவார்த்தை) சிறந்தது என்ற உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இந்திய தொலைக்காட்சி விவாதங்களில் எந்தப் பிரச்சினையும் தீர்க்கப்படுவதில்லை, அவை மேலும் தீவிரமடைகிறது. டிஆர்பிக்காக மூன்றாவது உலக யுத்தத்தையும் எங்களது நெறியாளர்கள் மகிழ்ச்சியுடன் தூண்டுவார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் கூட எங்கள் பிரதமர் பாகிஸ்தான் பிரதமருடன் விவாதம் நடத்துவதை நாங்கள் விரும்பவில்லை என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அபிஷேக் சிங்வி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.