இயக்குநர் பாலாவின் பி ஸ்டுடியோ தயாரிப்பில் ஆர்.கே.சுரேஷ் முதன்மை நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘விசித்திரன்’. மலையாளத்தில் வெளியாகி இந்தியா முழுவதிலிருந்தும் பாராட்டுக்கள் குவித்த ‘ஜோசப்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மறுஉருவாக்கம் தான் விசித்திரன்.
மலையாளப் படத்தை இயக்கிய இயக்குநர் எம்.பத்மகுமார் தமிழ் பதிப்பையும் இயக்கியுள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.
இந்நிலையில், இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இயக்குநர் சீனு ராமசாமி, இசை அமைப்பாளர் ஜீ.வி., நடிகர் சரவண சக்தி , வெற்றிஅரசு ஐ ஏ எஸ் அகாடமி நிறுவனர் ரூசோ, தயாரிப்பாளர் தனஞ்செயன், ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜாங்கிட் உள்ளிட்டோர் பேசினர்.
படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் பாலா பேசும்போது, “வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்த ரீமேக் பண்ணலாம் என்ற போது சுரேஷ் நான் பண்றேன் அண்ணா என்றான்.
அப்ப அதே டைரக்டரை அழைப்போம் என பத்மகுமாரை கூப்பிட்டு நீங்கள் அங்கே செய்ய முடியாததை, பணம் பற்றி கவலை இல்லாமல் பண்ணுங்கள் என்றேன். அவரும் மலையாள படத்தை விட இந்தப்படத்தை அழகாக எடுத்துள்ளார்.
இந்தப்படம் மூலம் சுரேஷுக்கு நல்ல மரியாதை கிடைக்கும் அதை அவன் காப்பாற்றி கொள்ள வேண்டும், படம் நன்றாக உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி” என்றார்.