வாஷிங்டன்:உலக நாடுகளுக்கு மலிவு விலையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் இந்திய நிறுவனங்களை, ‘மைக்ரோசாப்ட்’ இணை நிறுவனர் பில் கேட்ஸ் பாராட்டி உள்ளார்.
சுகாதாரம் தொடர்பான இந்திய – அமெரிக்க கூட்டு நடவடிக்கை வளர்ச்சிக்காக, நம் துாதரகம் ஏற்பாடு செய்த, ‘ஆன்லைன்’ கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும், ‘மைக்ரோசாப்ட்’ இணை நிறுவனருமான பில் கேட்ஸ் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
இந்திய தடுப்பூசி தயாரிப்பாளர்கள், கடந்த ஆண்டு 15 கோடி ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசிகளை, 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மலிவு விலையில் வழங்கி உள்ளனர். இதற்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கிறேன்.கொரோனா தொற்று முழுமையாக நீங்கவில்லை. இருப்பினும், அடுத்து என்ன என்பது குறித்து சிந்திக்க துவங்கி உள்ளோம்.
அதன்படி, எதிர்காலத்தில் வரும் நோய்கள் தொற்றாக மாறும் முன் கட்டுப்படுத்துவது நம் இலக்காக இருக்க வேண்டும்.நாட்டின் அறிவியல் தளத்தை உறுதி செய்து, அதன் வாயிலாக மருத்துவ உலகிற்கான புதிய கண்டுபிடிப்புகளை இந்தியா வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி கூறி இருப்பதை பெருமையுடன் எண்ணிப்பார்க்கிறேன்.
இந்த லட்சியக்கனவில் வெற்றி பெற ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதனையே பல எல்லைகளை கடந்து மக்களை காப்பாற்றிய ‘கோவாக்சின், கோர்பாவெக்ஸ் கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் நமக்கு உணர்த்துகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement