புது டில்லி: வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டு தப்பியோடிய தொழிலதிபர்களான விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரிடமிருந்து ரூ.18,000 கோடியை மீட்டு வங்கிகளுக்கு அளித்திருப்பதாக உச்ச நீதிமன்றத்துக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பணமோசடி வழக்குகளில் அமலாக்கத் துறை இயக்குனரகத்திற்கு பரந்த அளவிலான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அம்மனு விசாரணையில் உள்ளது. அதில் அரசுக்கு எதிராக கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி மற்றும் முகுல் ரோகத்கி உள்ளிட்ட பல மூத்த வழக்கறிஞர்கள் வாதாடி வருகின்றனர். பணமோசடி தடுப்புச் சட்டத்தில் கொண்டு வந்துள்ள சமீபத்திய திருத்தங்கள் தவறாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் கொண்டவை என்கின்றனர். கடுமையான ஜாமீன் நிபந்தனைகள், கைது செய்யப்பட்டதற்கான காரணங்களைத் தெரிவிக்காதது, தகவல் அறிக்கை வழங்காமல் கைது செய்வது, விசாரணையின் போது கூறுவதை சாட்சியமாக ஏற்பது போன்றவற்றை எதிர்க்கின்றனர்.
இவ்வழக்கில் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டதாவது: வெளிநாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வழக்குகளே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. பணமோசடி சட்டத்தின் கீழ் ஒர் ஆண்டில் இங்கிலாந்தில் 7,900 வழக்குகள், சீனாவில் 4,691 வழக்குகள், அமெரிக்காவில் 1,532 வழக்குகள், ரஷ்யாவில் 2,764 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில், 4,700 வழக்குகளை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. மொத்த வழக்குகள் சம்பந்தப்பட்ட தொகை ரூ.67,000 கோடி. கடந்த ஐந்து ஆண்டுகளில் (2016 – 2021) 33 லட்சம் எப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் 2,086 வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. என கூறியது.
Advertisement