சண்டிகர்:
மின்வாரியத்தை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து சண்டிகரில் மின்வாரிய ஊழியர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் 3 நாட்கள் போராட்டத்தை தொடங்கினார்கள்.
இதனால் சண்டிகரில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளதால் பல இடங்கள் 2 நாட்களாக இருளில் மூழ்கி உள்ளன.
குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. சாலைகளில் போக்குவரத்து சிக்னல்களும் இயங்காததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இரவில் பொதுமக்கள் வீடுகளில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து இருளில் கடும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள்.
மின் வினியோகம் இல்லாததால் ஆஸ்பத்திரிகளில் முக்கிய ஆபரேஷன்கள் தவிர மற்ற ஆபரேஷன்கள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.
இதுதொடர்பாக சண்டிகர் மருத்துவ இயக்குனர் டாக்டர் சுமன் சிங் கூறும் போது, ‘‘ஜெனரேட்டர் மூலம் 100 சதவீத மின்சாரத்தை வழங்க முடியவில்லை. இதனால் ஆஸ்பத்திரிகளில் ஆபரேஷன்கள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன’’ என்று தெரிவித்தார்.
மின் ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் குடிநீர் வினியோகமும் முற்றிலும் ஸ்தம்பித்து இருக்கிறது. இதனால் கடந்த 36 மணி நேரம் சண்டிகரில் பொது மக்கள் மின்சாரம், குடிநீர் வசதி இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
மின்வாரிய ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர இதுவரை நடத்திய பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியில் முடிந்துவிட்டன.
இந்தநிலையில் பஞ்சாப், அரியானா ஐகோர்ட்டு தாமாக முன் வந்து விசாரணை மேற்கொண்டது. தலைமை பொறியாளர் நேரில் ஆஜராகும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.