சென்னை
திமுக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளதால் மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தி உள்ளார்.
கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. அந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது.
மேலும் அதிமுக மற்றும் பாஜகவின் கோட்டையாக உள்ள கொங்கு மண்டலத்தில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கும் திமுகவே வெற்றி பெற்றுள்ளது.
திமுக எதிர்பார்த்ததை காட்டிலும் அமோக வெற்றி பெற்றிருப்பது முதல்வர் ஸ்டாலினை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், நடனமாடியும் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் குவிந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். சென்னை மெரினாவில் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தி உள்ளார்.
அவருடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன், திருவல்லிக்கேணி எம்.பி. உதயநிதி மாறன், ஆ. ராசா எம்.பி. உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.