சென்னை: நடைபெற்று முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 90 சதவிகித வெற்றியை பெற்றுள்ளது. 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றி சாதனை படைத்து உள்ளது. இதையடுத்து,. மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் குறித்து திமுக மாவட்டச் செயலாளர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, கோவை உள்பட பல மாநகராட்சிகளில் மேயர் பதவிகளை பிடிக்க கடுமையான போட்டி நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தமிழ்நாட்டில் மொத்தமாக தற்போது 21 மாநகராட்சிகள் இருக்கின்றன. இவற்றில் 1,374 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் இருக்கின்றன. 138 நகராட்சிகள் இருக்கின்றன. இதில் 3,843 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் இருக்கின்றன. 490 பேரூராட்சிகளும் அவற்றில் 7,621 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் இருக்கின்றன. மொத்தமாக 12,838 நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேர்வுசெய்யப்படுவார்கள். இந்தத் தேர்தலுக்கென மொத்தமாக 31,029 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. 55,337 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
வாக்குப்பதிவு பிப்ரவரி 19ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி நடைபெற்றது. இதில் பெருவாரியான வெற்றிகளை திமுக கூட்டணியே பெற்றுள்ளது. அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது.
வெற்றிபெற்றவர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டவர்கள், தங்களில் இருந்து ஒருவரையே பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர், மாநகராட்சி மேயர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடுபவர்களைத் தேர்வு செய்ய அந்த மறைமுகத் தேர்தலில் வாக்களிப்பார்கள்.
மாநகராட்சியின் தலைவர் அதாவது மேயர் பதவி, மிக மிக முக்கியமான, மரியாதைக்குரிய பதவி. இதுபோன்ற பதவிகளை மக்களின் நேரடி வாக்கு மூலம்தான் தேர்வுசெய்ய வேண்டும். ஆனால், இப்போது மறைமுகத் தேர்தல்தான் நடக்கவிருக்கிறது. மறைமுகத்தேர்தல் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றாலும், அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. இருந்தாலும், மறைமுகத் தேர்தல்கள் மிக நியாயமாக நடப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் கடமை என்பதையும் மறந்துவிடக்கூடாது.
அதன்படி, 21 மேயர்கள், 21 துணை மேயர்கள், 138 நகர் மன்ற தலைவர்கள், 138 நகர் மன்ற துணைத் தலைவர்கள், 490 பேரூராட்சி மன்றத் தலைவர்கள், 490 பேரூராட்சித் துணைத் தலைவர்கள் என 1,298 பதவிகளுக்கானவர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர். இதற்கான வேலையில் திமுக மும்முரமாக ஈடுபட்டு வருகிறத.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 21 மாநகராட்சிகளிலும் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்து திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது.
200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் திமுக பெரும் வெற்றி பெற்றுள்ளது.100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சியில் 64 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்று உள்ளது.100 வார்டுகளை கொண்ட கோவை மாநகராட்சியில் 51 வார்டுகளுக்கும் மேலாக திமுக கூட்டணி வெற்றி பெற்று உள்ளது. 65 வார்டுகளை கொண்ட திருச்சி மாநகராட்சியில் 59 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி கண்டுள்ளது. 60 வார்டுகளை கொண்ட சேலம் மாநகராட்சியில் 43 வார்டுகளுக்கும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 55 வார்டுகளை கொண்ட திருநெல்வேலியில் திமுகவுக்கு 47 வார்டுகள் கிடைத்துள்ளன. 60 வார்டுகளை கொண்ட திருப்பூரில் 30 க்கும் மேற்பட்ட இடங்களையும், 60 வார்டுகளை கொண்ட ஈரோட்டில் 48 வார்டுகளிலும், தூத்துக்குடியில் 50 வார்டுகளிலும், வேலூரில் 40 க்கும் மேற்பட்ட வார்டுகளிலும், தஞ்சாவூரில் 39 வார்டுகளிலும், திண்டுக்கலில் 37 வார்டுகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதேபோல திண்டுக்கல், ஓசூர், நாகர்கோவில், ஆவடி, தாம்பரம், காஞ்சிபுரம்,கரூர், கும்பகோணம், கடலூர், சிவகாசி ஆகிய 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றி உள்ளது.
கோவையில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் (73 வார்டு) மாநகராட்சியை கைப்பற்றியது. அதிமுக 3 வார்டுகளில் மட்டுமே வென்றுள்ளது. காங்கிரஸ் 9 வார்டுகளில் வென்றுள்ளது. எனவே, எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து காங்கிரஸ்கே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி மறைமுகத் தேர்தலில் யாரை முன்னிறுத்துவது என்பது குறித்து மாவட்ட வாரியாக திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அதில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டவுடன், அவை, தலைமைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான கட்சியின் மூத்த நிர்வாகிகள் விவாதித்து, வேட்பாளர்களை இறுதிசெய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், மாநகராட்சிகளின் மேயர், துணைமேயர் பதவிகள் மற்றும் நகராட்சி தலைவர்களின் பதவிகளை பிடிக்க திமுகவினர் மட்டுமின்றி கூட்டணி கட்சியின ரும் திமுக தலைமையிடம் பேசி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி மேயர் பதவியை பிடிக்க 2 பெண்கள் தீவிரமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக, ஆலந்தூர் மண்டலத்தில் 159வது வார்டில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் அமுதபிரியா செல்வராஜ், கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 70வது வார்டில் வென்ற ஸ்ரீதரணி ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. இதில், அமுதபிரியா செல்வராஜ், அமைச்சர் மா.சுப்பிரமணியத்தின் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. ஸ்ரீதரணி அமைச்சர் சேகர்பாபு ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. இதில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கப்போகிறது என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும். வரும் மார்ச் 4ஆம் தேதி மறைமுகமாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை மாநகராட்சியில்திமுக தனிப் பெரும்பான்மையுடன், வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் திமுக சார்பில் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் மேயர் பதவியைக் கைப்பற்ற போவது யார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கின்றது. இந்த போட்டியில் முதலில் இருப்பவர் 52 வது வார்டு் உறுப்பினர் அலக்குமி இளஞ்செல்வி. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் , கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான நா.கார்த்திக்கின் மனைவி. இவரது கணவர் நா.கார்த்திக் துணை மேயராகவும் இருந்துள்ள நிலையில் அவருக்கு மேயர் பதவிக்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றொருவர் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சேனாதிபதியின் மகள் நிவேதா. 97 வது வார்டில் வெற்றி பெற்றுள்ள 22 வயதான இளம் கவுன்சிலரான நிவேதா மேயராகத் தேர்ந்தெடுத்த பட வாய்ப்புகள் இருப்பதாகவும். பேசப்படுகின்றது.
கோவை மாநகராட்சியில் வெற்றியை பெற்றுக்கொடுத்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாமன்றத்தின் மேயர் யார் என்பதை கட்சித் தலைமையே முடிவு செய்யும் என தனது கட்சியினரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.