பிரதமர் நரேந்திரமோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன்- சீன அதிபர் ஜி ஜின்பிங், கனடா, லண்டன் பிரதமர்களுடன் வேஷ்டி சட்டையில் அஜித் நடந்து வரும் புகைப்படத்துடன், ‘ உலகநாடுகள் எதிர்ப்பார்க்கும் வலிமை’ என அஜித் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் கவனம் ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கியுள்ள திரைப்படம் வலிமை. ரசிகர்களிடையே இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பும், வரவேற்பும் மிகவும் அதிகமாக உள்ள நிலையில்,இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
மேலும் ‘வலிமை’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலால் முழு ஊரடங்கு ,திரையரங்கில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டது.இதனால் வலிமை திரைப்படம் ரிலீசை படக்குழு ஒத்திவைத்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் தற்போது அஜித் குமார் நடித்துள்ள வலிமை திரைப்படம் வருகிற 24 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. வலிமை திரைப்படத்திற்கான முதல் நாள் காட்சிகளின் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்ட நிலையில், வலிமை திரைப்படத்தை வரவேற்று பல விதமான போஸ்டர்களை அவரது ரசிகர்கள் ஒட்டி வருகின்றனர்.
மதுரையில் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் பிரதமர் நரேந்திரமோடியுடன் அஜித்குமார் வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு நடந்து வருவது போன்றும், அவருக்கு பின்னால் சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ, போரீஸ் ஜான்சன் ஆகியோர் உயர் பாதுகாப்பு படையினருடன் நடந்து வருவது போன்ற படங்களுடன், ‘உலகநாடுகள் எதிர்ப்பார்க்கும் வலிமை’, ‘இதுவே சிட்டிசனுக்கு பெருமை’ என்ற வாசகங்களோடு, வலிமை திரைப்படத்தை உலக நாடுகளும், அதன் அதிபர்களும் எதிர்நோக்கி இருப்பதாக சித்தரித்து ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM