பெங்களூரு:”போலீஸ் தவிர்த்து உள்துறையின் கீழ் செயல்படும் மற்ற பிரிவு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும்,” என உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்தார்.
கர்நாடக சட்டசபையில் ம.ஜ.த., உறுப்பினர் மஞ்சுநாத் கேள்விக்கு, உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா பதிலளித்து கூறியதாவது:ஊர் காவல் படையினருக்கு, பெங்களூரில் பணிபுரிவோருக்கு 455 ருபாயிலிருந்து 600 ரூபாயாகவும், மற்ற பகுதிகளில் பணிபுரிவோருக்கு 380 ரூபாயிலிருந்து 600 ரூபாயாகவும் தின பணிப்படி உயர்த்த ஆலோசிக்கப்படுகிறது.
போலீசாருக்கு ஒதுக்கப்பட்ட பணியை செய்யும் ஊர் காவல் படையினருக்கு 2020 ஏப்ரல் 1 முதலே தின பணிப்படியாக 750 ரூபாய் வழங்கப்படுகிறது.மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் எஸ்.பி.,க் கள் கோரிக்கைப்படி, தேவைப்படும் இடங்களில் பணியாற்ற ஊர்காவல் படையினர் நியமிக்கப்படுகின்றனர்.பயிற்சியின் போது காயம் ஏற்பட்டால், உடனடியாக 21 ஆயிரம் ரூபாய்; 60 சதவீதத்துக்கு மேல் நிரந்தர ஊனமுற்றால் 2 லட்சம் ரூபாய்; அதற்கு மேல் நிரந்தர ஊனமுற்றால் 3 லட்சம் ரூபாய்; இறக்கும்பட்சத்தில் 5 லட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
மேலும், மருத்துவ செலவு, பிள்ளைகளின் கல்வி செலவையும் அரசே ஏற்கிறது. சிறப்பாக பணிபுரிவோருக்கு, ரொக்க பரிசு, ஜனாதிபதி, முதல்வர் பதக்கம் வழங்கப்படுகிறது.போலீஸ் தவிர்த்து உள்துறையின் கீழ் செயல்படும் மற்ற பிரிவு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement