உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுருவுவது தொடர்பான பிரச்சினைக்கு எதிராக பிரித்தானியா அதிரடி நடவடிக்கைகளைத் துவங்கியது.
அதன்படி, பண பலமும், அரசியல் செல்வாக்கும் மிக்க ரஷ்யர்கள் பலர் மீது பொருளாதாரத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த செல்வந்தர்கள் மீது 2018ஆம் ஆண்டிலேயே அமெரிக்கா தடைகள் விதித்துவிட்ட நிலையில், அவர்கள் கவனம், பிரித்தானியா மீது திரும்பியது.
ரஷ்யாவிலிருந்து பல்லாயிரம் பில்லியன் டொலர்கள் லண்டன் மற்றும் பிரித்தானியாவின் கடல் கடந்த பிரதேசங்களுக்குள் கொண்டுவரப்பட்டன. மிகப்பெரிய பணக்கார ரஷ்யர்களுக்கு பிடித்த இடமாக லண்டன் ஆகிவிட்டது.
இந்நிலையில், யார் சொல்லியும் கேட்காமல் ரஷ்யா உக்ரைனை ஊடுருவும் நடவடிக்கைகளைத் துவக்க, இதற்குத்தான் காத்திருந்தோம் என்பது போல பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கத் துவங்கியுள்ளன.
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரஷ்ய பணம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், ரஷ்ய செல்வந்தர்களை பிரித்தானியாவை விட்டு வெளியேற்றவேண்டும் என்றும் பிரதமர் போரிஸ் ஜான்சனைக் கேட்டுக்கொண்டார்கள்.
ஆக, பிரித்தானியா ரஷ்யர்களுக்கெதிரான நடவடிக்கைகளைத் துவங்கிவிட்டது…
அதன்படி, SMP வங்கியின் இணை உரிமையாளரான Boris Rotenberg, அவரது உறவினரான Igor Rotenberg, Volga குழுமத்தை கட்டுப்படுத்தும் Gennady Timchenko என்ர ரஷ்ய கோடீஸ்வரர் முதலான பல செல்வந்தர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
அத்துடன், ஐந்து ரஷ்ய வங்கிகளுக்கு பிரித்தானியாவில் வர்த்தகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரான Boris Rotenberg என்பவரின் சொத்து மதிப்பு 1.2 பில்லியன் டொலர்கள் ஆகும். இவர், ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் ஜூடோ பயிற்சி பெற்றவர் ஆவார். இவரது மனைவியான Karina என்ற பெண் சமூக ஊடகங்களில் பிரபலமான ஒரு அழகி என்பது குறிப்பிடத்தக்கது.