உக்ரைன் – ரஷ்யா இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படுவதாக, கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ அறிவித்துள்ளார்.
‘நேட்டோ’ நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு
ரஷ்யா
எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது. இரு நாடுகளின் எல்லைகளில் போர் பதற்றம் நீடித்து வருகிறது.
இதற்கிடையே, அமைதிக் குழு என்ற பெயரில், எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்துள்ளது. இதற்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. மேலும், உக்ரைனுக்கு சொந்தமான டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய கிழக்கு மாகாணங்களில், ரஷ்ய ஆதரவு தலைவர்கள் தங்கள் மாகாணங்களை சுதந்திர நாடுகளாக அங்கீரிக்குமாறு விளாடிமிர் புதினை சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர்.
தங்கச் சுரங்கத்தில் வெடி விபத்து – 60 பேர் உயிரிழப்பு!
இதனையடுத்து அவர், கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள மாகாணங்களை சுதந்திர நாடாக அங்கீகரித்தார். இதன் காரணமாக, உக்ரைன் – ரஷ்யா எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படுவதாக, கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளமான ட்விட்டரில், அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உக்ரைனில் ரஷ்யாவின் சட்ட விரோத நடவடிக்கைகள் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் மற்றும் உலகம் முழுவதும் அமைதிக்கு அச்சுறுத்தலாகும். மேலும் இது ஒரு இறையாண்மை அரசின் மீதான படையெடுப்பு ஆகும். இதனால் நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து, கனடா முதல் சுற்று பொருளாதார தடை விதித்துள்ளது” என தெரிவித்து உள்ளார்.