ரஷ்யாவுக்கு வெளியே ராணுவ நடவடிக்கை எடுக்க அந்நாட்டு நாடாளுமன்றம் புதினுக்கு அதிகாரம் அளித்தது. இதனால் எந்த நேரத்திலும் கிழக்கு உக்ரைனில் ரஷ்யா படையெடுக்கும் சூழல் உருவாகியுள்ளது.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் முரண்பாடுகள் வலுக்கக் காரணமாக இருப்பது உக்ரைன் மேற்கத்திய நாடுகளின் நேட்டோ படையில் இணையப் போவதாக வந்த தகவல்கள். உக்ரைனைப் பயன்படுத்தி ரஷ்யா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா போன்ற நாடுகள் முயற்சிக்கலாம் என்று ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைனின் ஜனநாயகத்தை நசுக்கவும் இறையாண்மையை அச்சுறுத்தவும் ரஷ்யா முயற்சிப்பதாக அமெரிக்கா சாடியுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற மேலவையில் பேசிய அதிபர் புதின், ரஷ்யப் படைகள் நாட்டுக்கு வெளியே ராணுவ நடவடிக்கை எடுக்க ஒப்புதல் கோரினார். உக்ரைனில் ஏவுகணைகள் தயாரிக்கப்படுவதாகவும் அதில் அணு ஆயுதங்களுடன் ரஷ்யாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த உக்ரைன் தயாராகி வருவதாகவும் புதின் விளக்கம் அளித்தார். இதையடுத்து வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக நாடாளுமன்றம் அவருக்கு அந்த அதிகாரத்தை வழங்கியது.
உக்ரைன் எல்லையில் அந்நாட்டு ராணுவத்துடன் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பிரிவினைவாதிகள் யுத்தம் நடத்தி வருகின்றனர். அந்த பிரிவினைவாதிகளுக்கு உதவ ரஷ்யாவின் ராணுவம் தயாராகி வருகிறது. உக்ரைன் எல்லையில் Donetsk மற்றும் Luhansk பகுதிகளில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு அங்கீகாரம் அளித்த உடன்படிக்கையில் நேற்று புதின் கையெழுத்திட்டார். இதனால் போர் தவிர்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
மேலை நாடுகளின் ஆயுத உதவியைக் கோரியுள்ள உக்ரைன், இப்போதே போருக்கான தயார் நிலையை அடைந்துள்ளது. மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. போரில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ரஷ்யா போருக்குத் தயாராகிவிட்டதாகக் கூறும் மேலைநாடுகள் ரஷ்யாவுக்குப் பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளன. ரஷ்யாவின் 5 வங்கிகளுக்கு தடைவிதிப்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இதே போல் கனடா உள்ளிட்ட நாடுகளும் ஐரோப்பிய யூனியனும் ரஷ்யாவுக்கு பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளன.
இதனிடயே பலத்த ஆயுதங்களும் பீரங்கிகளும் கிழக்கு உக்ரைனை நோக்கி நகரத் தொடங்கியிருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.எல்லையில் பலத்த துப்பாக்கிச் சத்தம் கேட்கத் தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ரஷ்யா சுமார் ஒன்றரை லட்சம் படைவீரர்களை எல்லையில் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.