புதுடெல்லி: வங்கி சேவைகளை வர்த்தக ரீதியாக பெறுபவரை நுகர்வோராக கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஸ்ரீகாந்த் ஜி மந்திரிகர் என்பவர் பங்கு சந்தை வர்த்தக புரோக்கராக உள்ளார். இவர் தனது தொழிலின் அபிவிருத்திக்காக கடன் கேட்டு பஞ்சாப் நேஷனல் வங்கியில் விண்ணப்பித்தார். அதற்கு மாறாக அவருக்கு ‘ஓவர் டிராப்ட்’ பெறுவதற்கான வசதியை தருவதாக வங்கி கூறியது. இதையடுத்து, வங்கிக்கு எதிராக தேசிய நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் ஸ்ரீகாந்த் புகார் செய்தார். இதை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம், 1986ம் ஆண்டைய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2(1)(டி) பிரிவின் கீழ் புகார்தாரரை நுகர்வோராக ஏற்று கொள்ள முடியாது என்று உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்தார். நீதிபதிகள், எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அமர்வு நேற்று முன்தினம் இந்த வழக்கை விசாரித்தது. அப்போது நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ‘வர்த்தக ரீதியிலான சேவைகளை இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வர முடியாது என்று 2002ம் ஆண்டைய நுகர்வோர் பாதுகாப்பு திருத்த சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுய வேலைவாய்ப்பு மூலம் வருமானம் ஈட்ட ஒருவர் வங்கி சேவையை பெறும்போது ஏற்படும் பிரச்னைகளுக்கு மட்டுமே நுகர்வோர் சட்டத்தின் கீழ் புகார் அளிக்க முடியும். இந்த வழக்கில் வழக்கு தொடுத்தவருக்கும், வங்கிக்கும் இடையிலான உறவு வர்த்தக நோக்கம் கொண்டது. இதை சுயவேலை வாய்ப்பு என்று கருத முடியாது. இது குறித்து தேசிய நுகர்வோர் ஆணையம் அளித்த தீர்ப்பில் எந்த தவறும் இல்லை,’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.