புதுடெல்லி:
பணமோசடி வழக்குகளில் அமலாக்கத்துறை இயக்குனரகத்திற்கு பரந்த அளவிலான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அந்த மனு மீதான் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் அரசுக்கு எதிராக கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி மற்றும் முகுல் ரோத்கி உள்ளிட்ட பல மூத்த வழக்கறிஞர்கள் வாதாடி வருகின்றனர். பணமோசடி தடுப்புச் சட்டத்தில் கொண்டு வந்துள்ள சமீபத்திய திருத்தங்கள் தவறாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் கொண்டவை என்கின்றனர்.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று இந்த மனு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார்.
அப்போது அவர் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் தொடர்புடைய வங்கிக்கடன் மோசடி தொடர்பான வழக்குகளில் இதுவரை அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட 18 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிகளில் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.
வெளிநாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வழக்குகளே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்…மகாராஷ்டிர மாநில மந்திரி நவாப் மாலிக் கைது