வைப்பு தொகைக்கு 1,000% வட்டி… வீட்டுக்கு ரேஷன்; ஆசை காட்டி மும்பையில் ரூ.100 கோடி மோசடி!

அதிக வட்டி கொடுப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தாலும், மக்கள் வட்டிக்கு ஆசைப்பட்டு போலி கம்பெனிகளிடம் பணம் கட்டி ஏமாறுவது மட்டும் குறையவே இல்லை. மும்பையில் அது போன்ற ஒரு மோசடியில் 25 ஆயிரம் பேர் தங்களது பணத்தை பறிகொடுத்துவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர். மும்பை போரிவலியைச் சேர்ந்தவர் கிஷோர் காக்டே. இவர் காக் எகனாமிக் மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனியை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார். கம்பெனிக்கு முதலீட்டை கொண்டு வர புதிய கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தார். சூப்பர் மார்க்கெட்டாக இருந்ததை கிஷோர் இது போன்று மாற்றினார்.

மோசடிக்கம்பெனி

இதன் படி ஆரம்பத்தில் ரூ.5 ஆயிரம் கம்பெனியில் டெபாசிட் செய்தால் ஒவ்வொரு மாதமும் ரூ.2,100 மதிப்புள்ள ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஏராளமான ஏஜெண்டுகள் நியமிக்கப்பட்டனர். இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து 5 ஆயிரத்தை 25 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து மாதம் 8 ஆயிரம் மதிப்புள்ள ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

1,000% வட்டி

அதோடு கம்பெனியில் டெபாசிட் செய்பவர்களின் பணத்திற்கு 1,000 சதவிகிதம் வட்டி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இது தவிர வைப்புத் தொகைக்கு ஒவ்வொரு மாதமும் 20 சதவிகிதம் வட்டியும் வழங்கப்படும் என்று உத்தரவாதம் கொடுத்தனர். ரூ.52 ஆயிரம் டெபாசிட்டாக வைத்தால் அவர்களுக்கு வட்டியோடு, குலுக்கல் முறையில் காரும் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த கவர்ச்சித்திட்டங்களை நம்பி ஏழைகள் குறிப்பாக ஆட்டோ ஓட்டுபவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், முதியோர்கள் மாதாந்திர வருமானத்திற்கு ஆசைப்பட்டு பணத்தை டெபாசிட் செய்தனர்.

டெலிவரி பாயாக வேலை செய்யும் ராஜேஷ் என்பவர் இது குறித்து கூறுகையில், “கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் சாப்பாட்டிற்கே மிகவும் கஷ்டப்பட்டோம். எனவே ரேஷன் பொருள்கள் ஒவ்வொரு மாதமும் கொடுக்கிறார்கள் என்று நினைத்து, என் மனைவியின் நகையை அடகு வைத்து 5 ஆயிரம் ரூபாய் செலுத்தினேன். ஓரிரு மாதங்கள் மட்டும் பொருள்கள் கொடுத்தனர். அதன் பிறகு கொடுக்கவே இல்லை. கேட்பதற்காக கம்பெனிக்கு சென்றால் கம்பெனிக்கு வெளியில் அடியாள்களை நிறுத்தி இருக்கின்றனர்.

அவர்கள் எங்களை உள்ளே விடவில்லை. என் அம்மா, அத்தை ஆகியோர் ரூ.10 ஆயிரம் கட்டினால் ஒரே ஆண்டில் ஒரு லட்சமாக கிடைக்கும் என்றும், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு கார் வழங்கப்படும் என்றும் சொன்னதால் தங்களிடம் இருந்த நகைகளை அடகு வைத்து தலா 10 ஆயிரம் கட்டினர். ஆனால் ஒரு ஆண்டு முடிந்த பிறகும் பணம் திரும்ப கிடைக்கவே இல்லை. எங்களை போன்று நூற்றுக்கணக்கானோர் ஏமாந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

ரூ.100 கோடி மோசடி

இந்த கம்பெனியில் வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.19 லட்சத்தை கட்டிவிட்டு ஏமாந்த 73 வயது எல்.ஐ.சி.ஏஜெண்ட் இது குறித்து கூறுகையில், “ஒவ்வொரு மாதமும் 20 சதவிகித வட்டி கிடைக்கும் என்ற ஆசையில் எனது வாழ்நாளில் சேமித்திருந்த அனைத்து பணத்தையும் வைப்புத் தொகையாக செலுத்தினேன். ஆனால், இதுவரை எனக்கு வட்டியும் வரவில்லை. நான் கட்டிய பணத்தையும் கொடுக்கவில்லை. கம்பெனிக்கு வெளியில் 50 அடியாள்களை நியமித்து வருபவர்களை மிரட்டுகின்றனர். நானும் ஒரு ஆண்டாக அலைந்து பார்த்தேன். பணம் கிடைக்கவில்லை” என்று தெரிவித்தார். இந்த கம்பெனியில் ரூ.7 லட்சம் கட்டி ஏமாந்த முதியவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தி கம்பெனி உரிமையாளர் கிஷோரைக் கைது செய்துள்ளனர்.

இது குறித்து இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இதுவரை 25 ஆயிரம் பேர் வரை ஏமாந்திருப்பது தெரியவந்துள்ளது. ரூ.100 கோடி வரை மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறோம்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.