புதுடெல்லி: பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நேரடி பொது தேர்வை ரத்து செய்ய கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் மாநில கல்வி வாரியங்களில் 10, 12ம் வகுப்புகளுக்கு நேரடி பொது தேர்வினை ரத்து செய்யகோரி குழந்தைகள் நல ஆர்வலர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஏ.எம்.கன்வீல்கர், தினேஷ் மகேஸ்வரி, சி.டி.ரவிகுமார் அடங்கிய அமர்வு விசாரித்தது.அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘இத்தகைய மனுக்கள் மாணவர்களிடம் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தும். அதுபோல் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு தவறான நம்பிக்கையை ஏற்படுத்தி விடும். இதுபோன்ற மனுக்களை ஏற்று கொண்டால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும். இதுகுறித்து அதிகாரிகளே முடிவெடுப்பர்,’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.* நீதிபதிகள் எச்சரிக்கைஇந்த வழக்கில் மனுதாரரின் வழக்கறிஞர் வாதிடுகையில், ‘உபி உள்பட பல மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடந்து வருகிறது’ என்று குறிப்பிட்டார். அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘இதுபோன்ற சம்பவத்தை நாங்கள் கேள்விப்படவே இல்லை. இந்த மனு தேவையில்லாதது. எதிர்காலத்தில் இதுபோன்று மனு தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும்,’ என்று எச்சரித்தனர்.