நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் திமுக பெருநகர சென்னை மாநகராட்சியில் திமுக போட்டியிட்ட 165 வார்டுகளில் 153 வார்டுகளில் வெற்றி பெற்று சென்னை மாநகராட்சியைக் கைப்பற்றியுள்ளது. சென்னை மாநகராட்சியில் ஆளும் திமுக சுமார் 93% இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதில், குறைந்தபட்சம் திமுகவைச் சேர்ந்த 7 வேட்பாளர்கள் 10,000 வாக்குகளுக்கு அதிகமான வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
அதே நேரத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலில், எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணி 200 வார்டுகளில் போட்டியிட்டாலும் 15 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.
சென்னை மாநகராட்சித் தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 22) வெளியானபோது, 5 சுயேச்சை வேட்பாளர்களின் வெற்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்த ஐந்து சுயேச்சை வேட்பாளர்களும் ஆளும் திமுக மற்றும் எதிர்கட்சியான அதிமுக வேட்பாளர்களைத் தாண்டி வெற்றி பெற்று கவனிக்க வைத்துள்ளனர். மேலும், சென்னை மாநகாராட்சியில், பாஜகவும் டிடிவி தினகரனின் அமமுகவும் ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்று தங்கள் கணக்கை தொடங்கியுள்ளன.
சென்னை மாநகராட்சியில், திமுக மட்டுமல்ல அதன் கூட்டணி கட்சிகளும் சிறப்பாக செயல்பட்டுள்ளன. திமுக கூட்டணி கட்சிகளான, காங்கிரஸ் கட்சி 13 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விசிக தலா 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. திமுகவின் மற்ற கூட்டணி கட்சிகளான மதிமுக 2 இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் சென்னை மாநாகராட்சி கவுன்சிலில் 89% இடங்களை பிடிக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியல் இனப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், சென்னை மாநகராட்சியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள 15 பட்டியல் இனப் பெண் கவுன்சிலர்களில் ஒருவரைத்தான் திமுக மேயராகத் தேர்ந்தெடுக்கபோகிறது. திமுக சார்பில் வெற்றி பெற்ற பட்டியல் இனப் பெண் கவுன்சிலர்கள் 28 வயது முதல் 62 வயது வரை உள்ளனர்.
சென்னையில் புதியதாக வெற்றி பெற்ற பெண் கவுன்சிலர்களில் 98 வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களமிறக்கிய ஆட்டோ ஓட்டுநரின் 21 வயது மகள் பிரியதர்ஷினி மிகவும் இளம் வயது கவுன்சிலர் என்ற பெருமையை தட்டிச் சென்றார்.
சென்னை மாநகராட்சிக் கவுன்சிலில் திமுக கூட்டணி 89 சதவீதம் இடங்களை ஆக்கிரமித்துள்ளதால் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், வி.சி.க செம்ம ஹேப்பியாக உள்ளன.
இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சென்னையில் பெற்றிருக்கும் வெற்றி என்பது திமுகவுக்கு ஒரு வகையில் ஹாட்ரிக் வெற்றி ஆகும். திமுக சென்னையில் உள்ள 4 மக்களவைத் தொகுதிகளும் 16 சட்டமன்றத் தொகுதிகளில் 15 சட்டமன்றத் தொகுதிகளும் ஏற்கெனவே திமுகவின் கைவசம் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“