சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில், மகாராஷ்டிர மாநில அமைச்சர் நவாப் மாலிக்கை, அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவேசனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டணி அரசுக்கும், மத்திய பாஜக அரசுக்கும் தொடக்கத்தில் இருந்தே மோதல் போக்கு நிலவி வருகிறது. ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதற்கிடையே, மும்பை நிழல் உலக தாதா பயங்கரவாதி தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகளுடன், தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்தத் தலைவரும், மகாராஷ்டிர மாநில அமைச்சருமான நவாப் மாலிக், சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக புகார் எழுந்தது. இதே குற்றசாட்டை, பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் முதலமைச்சரும், மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தேவேந்திர பட்னவிசும் கூறி இருந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டு எல்லாம் அடிப்படை ஆதாரமற்றவை என, மகாராஷ்டிர மாநில அமைச்சர்
நவாப் மாலிக்
திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை 6 மணி அளவில், மும்பையில் உள்ள அமைச்சர் நவாப் மாலிக்கின் வீட்டிற்கு, சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பாக விசாரிக்க, அமலாக்கத் துறை அதிகாரிகள் வந்தனர். அங்கு சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்திய அதிகாரிகள், மேற்கொண்டு விசாரிக்க, அவரை, அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அமைச்சர் நவாப் மாலிக்கிடம் தொடர் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து பல மணி நேர விசாரணைக்கு பின்னர், சட்ட விரோதமாக பணப் பரிமாற்ற வழக்கில், அமைச்சர் நவாப் மாலிக்கை, அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். கைதுக்கு பின்னர், அமைச்சர் நவாப் மாலிக் கூறுகையில், “கைது செய்யப்பட்டிருக்கலாம்; ஆனால் பயப்பட மாட்டேன். நாங்கள் போராடி வெற்றி பெறுவோம்” என்றார்.