‘வடசென்னை இன்னும் விரிவாக இலக்கியத்தில் பதியப்பட்ட வேண்டும்’ எனச் சொல்லும் எழுத்தாளர் பாக்கியம் சங்கர், அறியப்படாத சென்னையின் பக்கங்களையும் அதன் எளிய மனிதர்களின் கதையையும் தொடர்ச்சியாக எழுதி வருபவர். அவரிடம் புத்தகக் காட்சி குறித்து உரையாடினோம்.
“புத்தகக் கண்காட்சிக்கும் உங்களுக்குமான உறவு பற்றி…”
“எனக்கும் புத்தகக் கண்காட்சிக்குமான உறவு குறைந்தது 20 வருடங்கள் இருக்கும். அப்போதெல்லாம் புத்தகம் வாங்க காசு இருக்குமா எனத் தெரியாது. அங்க போனால் நிறைய சீனியர் எழுத்தாளர்களை பார்க்க முடியும் என மட்டும் தெரியும். புத்தகங்களைப் பார்க்குறது தொட்டு ரசிக்கிறது இப்படி உற்சாகமாக புத்தக கண்காட்சி ஆரம்பிக்கும். சின்ன சின்னதா காசு சேர்த்து ரொம்ப ஆவலோடு புத்தக கண்காட்சி போயி தேர்ந்தெடுத்து ஒரு புத்தகம் வாங்குவோம். ‘அட, இந்த புத்தகம் வாங்காம விட்டோமே’ என பின்பு வருத்தப்படுவதெல்லாம் நடக்கும். மெஹந்தி சர்க்கஸ் சரவணன், ராஜு முருகன், நான், யுகபாரதி எல்லோரும் அறைத் தோழர்கள். யுகபாரதி கிட்ட இருந்து புத்தகம் திருடுவோம். இப்படி சேகரிக்கிற புத்தகங்கள் பயங்கர சந்தோசத்தைக் கொடுக்கும். இரண்டு நாள் துடைச்சு வைப்போம், ‘டேய் கம்முனாட்டி என்ன படிடா’ன்னு அந்தப் புத்தகம் சொல்லும். அதன் பிறகு அதை வாசிக்கத் தொடங்குவோம். புத்தகத்தைப் படிச்சதும், வட சென்னை நண்பர்கள் குழாம் அதை பற்றி விவாதிப்போம். ஒரு வருடத்திற்கான ஆக்சிஜனை இந்தப் புத்தக கண்காட்சியின் பத்து நாட்கள் தரும். நமக்கு திருவிழா என்றால் அது புத்தக கண்காட்சி தான்.
“எந்த வகையிலான புத்தகங்கள் வாங்க விருப்பப்படுவீங்க…”
“வாழ்வைப் பற்றி எழுதப்படும் நூல்கள், தன்வரலாறு இப்படியாக தேடுவேன். சிதம்பர நினைவுகள் மட்டும் குறைந்தது 1000 பேருக்கு பரிந்துரை செய்திருப்பேன். பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதியுள்ள அந்தப் புத்தகத்தில் தன் வரலாறு என்பதைத் தாண்டி அவ்வளவு கதைகள் இருக்கும். சிறுகதை, பயணம் சார்ந்த கட்டுரைகள், நவீன கவிதைகள் இப்படியாக என் செலக்சனை சொல்லிக் கொண்டே போகலாம். எழுத்தாளர் தன் வரலாறை இன்னும் தான் எழுதுகிறான். திருடன் மணியன்பிள்ளை நூல் ஒருவரின் வரலாறைத் தாங்கி வருகிறது. நம்மை சுவராசியப்படுத்துகிறது. அவற்றோடு நான் நெருக்கமாக இருப்பதாக உணர்கிறேன்”
“கவனிக்கத்தக்க புத்தகங்கள்…”
1. கரன் கார்க்கி எழுதிய சட்டைக்காரி (நாவல்) – நீலம் பதிப்பகம்
2. இனியன் எழுதிய ‘விடுபட்டவர்கள்- இவர்களும் குழந்தைகள் தான்’ (கட்டுரைகள்) – நாடற்றோர் பதிப்பகம்
3. ந.பெரியசாமி எழுதிய ‘ஒளியின் நிழல்’ (கட்டுரைகள்) – தேநீர் பதிப்பகம்
4. செந்தில் ஜெகன்நாதன் எழுதிய ‘மழைக்கண்’ (சிறுகதை தொகுப்பு) – வம்சி பதிப்பகம்
5. ப.திருமாவேலன் எழுதிய ‘இவர் தமிழர் இல்லையென்றால் வேறு எவர் தமிழர்’ -நற்றிணை பதிப்பகம்
“வடசென்னை பற்றிய உங்கள் பணி குறித்து…”
“நகரத்தின் ஆன்மா என்று ஒன்றுண்டு. அதனை இலக்கியத்தில் விரிவாக எழுத வேண்டும். சென்னை என்றாலே உருவாகி இருக்கும் மனநிலை உண்மையான சென்னை கிடையாது. நிறைய பாக்சர்ஸ், கேங்ஸ்டர்ஸ் பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். இதுவரை சொல்லப்பட்டதுக்கு மாறாக அது இருக்கும். ஜோ டி குரூஸ் தென்மாவட்ட மீனவர்களின் வாழ்க்கையை எழுதியது போல இங்கேயும் அதற்கான தேவை இருக்கிறது. மெரினா மட்டும் கடல் இல்லை. காசிமேடு தொடங்கி பழவேற்காடு வரை ஒரு கடல் சார்ந்த வாழ்வு இருக்கிறது. ஒரு கலாச்சாரம் இருக்கிறது. எழுத்திலும் திரைப்படத்திலும் அவை இடம்பெற வேண்டும். ஒரு நகரத்தைக் குற்றவியல் நகரமாக பார்ப்பது சரியற்றது. மதுரைக்கும் வடசென்னைக்கும் ஒரே நிறம், ஒரே குணம். கோபத்தையும் பாசத்தையும் அதிகமாக காட்டுகிற கலாசாரங்கள் இவை இரண்டும். எம்ஜிஆர் ஒரு படத்தில், ‘இந்தா வாங்கிக்கோ கிட்டேரி முத்து குத்து’ என்று சொல்வார், அந்த கிட்டேரி முத்து தொடங்கி, ஜிம்னாஸ்டிக் அறியப்படாத காலத்திலேயே அதை பயிற்சி செய்த மாஸ்டர் சாண்ட்ரோ ராஜ், என்.ஜீவானந்தம், தோழர் ஜீவா, சிங்காரவேலர் எனச் சொல்லிக்கிட்டே போகலாம். இவர்கள் வாழ்ந்த நிலம் இது. இவர்களின் எச்சத்தின் குரலாக தான் நாங்கள் ஒலிக்கிறோம். இப்போது தொல்குடியில் இருந்து மாறி வருகிறது. இவையெல்லாம் எழுதப்பட வேண்டும்.”