Tamilnadu News Update : இருசக்கர வாகனத்தை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட பட்டதாரி வாலிபர் ஒருவர் ஆங்கிலம் கலந்து அடுக்குமொழியில் பேசிய காவல்துறையினரை திகைப்பில் ஆழ்த்தியுள்ளார்.
எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்ற சொல்லவே முடியாது என்ற பழமொழிக்கு ஏற்ப திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்த பட்டதாரியை பிடித்து விசாரித்ததில் காவல்துறையினரே திகைத்து நின்ற சம்பவம் தேனி மாவட்டத்தில் நடந்துள்ளது. தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் திறந்திருந்த வீ்ட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஒருவர் தகராறு செய்வதாக கிடைத்த புகாரின் அடைப்படையில் அங்கு சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் ராதாகிருஷ்ணன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் 33 வயதாகும் அவருக்கு இன்னும் திருமணமாகாத நிலையில், எம்ஏ.பிஎட் படித்துள்ளதாக கூறியுள்ளார். திறந்திருக்கும் வீட்டிற்குள் துழைந்து வீட்டின் உரிமையாளரையே மிட்டும் பழக்கம் உள்ள இவர், சாவியுடன் பொதுவெளியில் நிற்கும் வாகனங்களை திருடிச்சென்றுவிடுவதாக கூறியுள்ளார்.
தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், திறந்து கிடந்த ஒரு வீட்டில் நாய் நுழைந்ததுபோல் நுழைந்தேன். அங்கு இரண்டரை லட்ச ரூபாய் மதிப்புள்ள உயர் ரக பைக் ஒன்று சாவியுடன் கண்ணாடி மாளிகையில் நின்றுகொண்டிருந்தது. ஆசையை தூண்டும் விதமாகவும் தப்பு செய்வதற்கு வாய்ப்பு கொடுப்பது போலவும் இருந்தது. பயத்திற்கு பயம் காட்டும் தல அஜித் பேன் ஆகிய நான், அந்த பைக்கை எடுத்துக்கொண்டு கஞ்சா வாங்குவதற்காக இங்கு வந்தேன். நான் ஒரு கஞ்சா அடிக்ட். இரு சக்கர வாகனத்தில் ஆண்டிப்பட் கணவாய் அருகே சென்றுகொண்டிருந்தபோது வாகனத்தின் ஜெயின் அறுந்துவிட்டதால். அங்கேயே நிறுத்திவிட்டு வந்துவிட்டேன்.
மேலும் நான், பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜநாத்சிங், முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஒ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா, உதயநிதி ஸ்டாலின் டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட பலருக்கும் கவிதை எழுதியுள்ளதாக கூறியுள்ளார். அதன்பிறகு மறுநாள் காலை 9.30 மணிக்கும் மீண்டும் பழனிசெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் ஆஜராவதாக அவர் சொல்கிறார். இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.