கேரளாவில் இருந்து ஏராளமான மாணவர்கள் உக்ரைனில் தங்கி உயர் கல்வி படித்து வருகிறார்கள். அங்கு போர் பதட்டம் ஏற்பட்டதும் அவர்களில் பலர் ஊர் திரும்பினர். ஆனால் இன்னும் பல மாணவர்கள் அங்கிருந்து திரும்ப முடியாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் இன்று கேரளா வந்த தங்களின் நண்பர்களை தொடர்பு கொண்டு உக்ரைன் போர் நிலவரம் குறித்து பகிர்ந்து கொண்டனர். அதன்விபரம் வருமாறு:-
உக்ரைன் எல்லையில் வசிக்கும் கேரள மாணவர்கள் எங்களை தொடர்பு கொண்டு போர் தொடங்கி விட்ட தகவலை தெரிவித்தனர். அதை கேட்டதும் நாங்கள் பதற்றம் அடைந்தோம். நேற்று விடிய விடிய தூங்காமல் இருந்தோம்.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5 மணி முதல் உக்ரைன் எல்லை பகுதியில் குண்டு வீச்சு நிகழ்ந்தது. அடுத்தடுத்து குண்டுகள் விழும் சத்தத்தை கேட்டோம்.
குண்டு மழை பொழிந்தபோது வீடுகள் அதிர்ந்தன. ஜன்னல்கள் உடைந்து விழுந்தது. போர் நடைபெறும் என முன்கூட்டியே தெரிந்ததால் நாங்கள் அடுத்த சில நாட்களுக்கு தேவையான உணவு வகைகளை சேமித்து வைத்துள்ளோம்.
மேலும் இங்கிருந்து ஊர் திரும்ப இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டோம். அவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக கூறியிருந்தனர். அதற்குள் போர் தொடங்கியதால் இப்போது விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டது.
இதற்கிடையே உக்ரைனில் பெட்ரோல் போட நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன. பொதுமக்கள் பலரும் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகிறார்கள்.
எல்லையில் இருக்கும் நம் நாட்டு மாணவர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு வந்த வண்ணம் உள்ளனர். சாலை முழுவதும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.