அதிக விலைக்கு தட்டோடு (டைல்ஸ் டைல்ஸ் விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பாக முறைப்பாடு செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் நேரடி தொலைபேசி இலக்கமான 1977க்கு இதுதொடர்பாக பொதுமக்களால் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவுகின்ற டைல்ஸ் தட்டுப்பாட்டை சாதகமாக பயன்படுத்தி சில வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்கள், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு டைல்ஸ்களை விற்பனை செய்வதாக நுகர்வோரிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதிக விலைக்கு டைல்ஸ்களை விற்பனை செய்கின்ற வர்த்தகர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு, இலங்கையில் உள்ள முன்னணி டைல்ஸ் நிறுவனம் ஒன்றும் அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சில டைல்ஸ் விற்பனையாளர்கள், நுகர்வோரை ஏமாற்றி பல்வேறு நிரங்களில் டைல்ஸ்களை விற்பனை செய்துவருவதாக குற்றச்சாட்டுகள் கிடைத்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.