கேரளாவில் அவசர உதவி எண்ணை மக்கள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில், அம் மாநில காவல்துறை, நடிகர் விஜயின் படங்களை வைத்து, புது யுக்தியின் மூலம் வித்தியாசமாக விளம்பரம் செய்துள்ளது வரவேற்பை பெற்று வருகிறது.
பொதுவாக நாம் பேருந்திலோ, ரயிலிலோ அல்லது சாலைகளிலோ பயணிக்கும்போது, எதிர்பாராதவிதமாக நமக்கு அவசர உதவி தேவைப்படும். நாம் மட்டுமின்றி நமது உறவினர்கள் அல்லது நண்பர்கள் யாருக்கேனும் உதவி தேவைப்படலாம். அந்தவகையில், அமெரிக்காவில் எல்லா அவசர உதவிக்கும் 911 என்ற எண் இருப்பது போல், தீயணைப்பு, பெண்கள் பாதுகாப்பு, காவல்துறை, ஆம்புலன்ஸ் என எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, மத்திய அரசு 112 என்ற அவசர எண்ணை கொண்டு வந்துள்ளது.
நாடு முழுவதும் அவசர உதவிக்கு ஒரே எண்ணை (112) அழைக்கும் திட்டத்தின் கீழ், இந்தத் திட்டம் படிப்படியாக பல மாநிலங்களிலும் அறிமுகப் படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் கேரள மாநில அரசும் ஏற்கனவே இணைந்துள்ளது. இந்நிலையில், 112 அவசர எண்ணை விளம்பரப்படுத்த கேரள மாநில காவல்துறை புது முயற்சியை மேற்கொண்டுள்ளது.
கேரள மாநில காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில், நடிகர் விஜயின் ‘போக்கிரி’ படத்தில் ரயிலில், நடிகை அசின் மற்றும் அவரது தம்பி ரவுடிகளிடம் மாட்டிக்கொள்ளும் சீனையும், அப்படி மாட்டிக்கொண்டால் ‘தெறி’ படத்தில் காவல்துறை உடையில் விஜய் மாஸாக வந்திறங்கும் காட்சியையும் வைத்து, “நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த எவரேனும் அவசரநிலையில் சிக்கிக்கொண்டால், 112-ஐ டயல் செய்யுங்கள், நாங்கள் உங்களுக்காக வந்து நிப்போம்!” என்று பதிவிட்டுள்ளது. இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
If you or anyone you know is stuck in an emergency, dial 112 and we will be there for you!#keralapolice #Dial112 #ERSS #EmergencyHelpline pic.twitter.com/EwZntZeoqT
— Kerala Police (@TheKeralaPolice) February 24, 2022