‘ஆயுதம் ஏந்துவதற்குத் தயாராக இருக்கும் எவரும் நாட்டின் பாதுகாப்புப் படையில் சேரலாம்’ என்று தனது குடிமக்களை உக்ரைன் அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் விடுத்த அறிவிப்பில், “ஆயுதம் ஏந்துவதற்குத் தயாராக இருக்கும் எவரும் நாட்டின் பாதுகாப்புப் படையில் சேரலாம்” என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே, ரஷ்யாவின் தாக்குதலில் ஏறத்தாழ 100 உக்ரைன் பாதுகாப்பு படையினர் பலியானதாகவும், உக்ரைன் அரசின் 8 இணையப் பக்கங்கள் ரஷ்யாவால் முடக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ரஷ்ய படைகள், உக்ரைனை தீவிரமாக தாக்கத் தொடங்கியுள்ளன. உக்ரைன் ராணுவ வீரர்கள் தங்களது ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும், சர்வதேச அமைப்புகளும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு எதிரான நிலைப்பாட்டையே பெரும்பாலான நாடுகளும் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.