லண்டன்,
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்தது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன.
இந்த நிலையில், போரை தவிர்க்க ரஷியாவிடம் ஐ.நா. அமைப்பு வைத்த வேண்டுகோள் ஒருபுறம் இருக்க, உக்ரைனின் ராணுவ நடவடிக்கையை கைவிட அந்நாட்டுக்குள் சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு ரஷிய அதிபர் புதின் இன்று உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து ரஷிய படைகள் உக்ரைன் நகரங்களில் குண்டுமழை பொழிந்தது. உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் வடக்கு பகுதிக்குள் ரஷிய படைகள் நுழைந்து உள்ளன. முன்னதாக பெலாரஸ் நாட்டில் குவிக்கபட்டு இருந்த ரஷிய படைகள் கீவ் நகருக்குள் நுழைந்தன.
இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பிற்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ரஷியாவின் ஆக்கிரமிப்புக்கு பயப்படமாட்டோம். இங்கிலாந்து தொடர்ந்து உக்ரைனுக்கு துணை நிற்கும்.
இராஜதந்திர ரீதியாக, அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக இறுதியில் ராணுவ ரீதியாக இங்கிலாந்தின் நிலைப்பாடு இருக்கும்.
மேற்கத்திய நாடுகளின் அரசியலில் ஆதிக்கம் செலுத்த புதின் பயன்படுத்தும் மேற்கத்திய நாடுகளின் ரஷிய கச்சா எண்ணைய் மற்றும் எரிவாயு சார்ப்பு கொள்கைகளை முடிவுக்கு கொண்டு வர நாம் நிலைப்பாடு எடுக்க வேண்டும்’ என்றார்.