உக்ரைன் ரஷ்ய எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை தொடங்க ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் உத்தரவிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக, உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதலை தொடங்கியுள்ளன. முன்னதாக, உக்ரைனில் உள்ள தங்களது நாட்டவர்களை அந்தந்த நாடுகள் நாடு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்தது. அந்த வகையில், உக்ரைனில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப இந்திய அரசு, வேண்டுகோள் விடுத்தது.
இதையடுத்து, அதிகரித்து வரும் போர் பதற்ற சூழல் காரணமாக உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு இயக்கப்படும் விமானங்களுக்கான தளர்வுகளை இந்தியா அனுமதித்தது. அதன் தொடர்ச்சியாக, உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்துவர 3 சிறப்பு விமானங்களை இயக்குவதாக டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்தது.
இதையடுத்து, உக்ரைன் நாட்டிற்கு கடந்த 20ஆம் தேதி சென்ற ஏர் இந்தியாவின் முதல் சிறப்பு விமானம் சுமார் 200க்கும் மேற்பட்ட இந்தியர்களுடன் பாதுகாப்பாக நாடு திரும்பியது. தொடர்ந்து பிப்ரவரி 24 (இன்று) மற்றும் 26 ஆகிய தேதிகளில் மேலும் 2 விமானங்களை அனுப்பி அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக ஏர் இந்தியாவின் இரண்டாவது விமானம் இன்று காலை டெல்லியில் இருந்து உக்ரைன் சென்றது. ஆனால், உக்ரைன் மீதான போரை ரஷ்யா தொடங்கியுள்ளதால், அந்நாட்டில் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், வான்வெளியையும் உக்ரைன் நாடு மூடியது.
அதனால், நடு வானில் சிக்கிய
ஏர் இந்தியா விமானம்
, NOTAM அறிவிப்பின்படி மீண்டும் டெல்லி திரும்பிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் அங்கு சிக்கியுள்ள இந்தியர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உக்ரைனில் சிக்கியுள்ள நிலையில்,
உக்ரைன் ரஷ்யா போர்
தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.