புதுடில்லி:ரஷ்யா – உக்ரைன் இடையே போர் ஏற்பட்டு உள்ளது, இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டு உள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள், சவால்கள் குறித்து நிபுணர்கள் கூறியுள்ளதாவது: ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர், நிச்சயம் உலக நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதில், இந்தியா மட்டும் விதிவிலக்கு கிடையாது.
சீனாவுக்கு வாய்ப்பு
உடனடியாக ஏற்படக் கூடிய பாதிப்புகளை சமாளிக்க, மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போதைய நிலையில், இந்தியா உடனடியாக சில சவால்களை சந்திக்க நேரிடும். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால், நம் அண்டை நாடான சீனாவுக்கு புதிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா, தைவான் மற்றும் ‘குவாட்’ நாடுகள் மீது மிகுந்த ஆக்ரோஷத்துடன் தாக்குதல் நடத்துவதற்கு சீனா முயற்சிக்கும் வாய்ப்பு உள்ளது.
கடந்த, 1962ல், அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன், கியூபா மீது கவனம் வைத்திருந்தன. அப்போது, சீனா இந்தியா மீது நடத்திய தாக்குதலை உலக நாடுகள் கவனிக்கவில்லை. அது போன்ற சூழ்நிலை மீண்டும் உருவாகியுள்ளது.
துாதரக உறவுகள்
இந்தியா மற்றும் ரஷ்யா இடையே, மிக நீண்டகாலமாக, ராணுவ உறவு உள்ளது. இந்தியா, ரஷ்யாவிடம் இருந்தே அதிக அளவில் ராணுவத் தளவாடங்களை வாங்கி வருகிறது. ஏற்கனவே, ரஷ்யாவிடமிருந்து, எஸ் – 400 ரக ஏவுகணைகள் வாங்குவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பதாக கூறியுள்ளது.தற்போது ரஷ்யாவுக்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அதனால், ரஷ்யா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால், அந்த நாடுகளின் விரோதத்தை இந்தியா சந்திக்க நேரிடும்.
அதனால் தான், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் பேசியபோது, ஐ.நா.,வுக்கான நம் துாதர் டி.எஸ். திருமூர்த்தி, ‘பிரச்னைக்கு துாதரக உறவு மூலம் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும்’ என, பட்டும் படாமலும் கூறியுள்ளார். இதற்கு, ரஷ்யா பாராட்டு தெரிவித்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.