ஈரோடு: இந்திய தூதரகத்தின் உதவி கிடைக்காத நிலையில், சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகிறோம் என உக்ரைனில் மருத்துவம் படிக்கும் அந்தியூர் மாணவி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த நாகராஜ் – குணவதி தம்பதியினரின் மகள் மவுனிசுகிதா (20). உக்ரைனில் உள்ள லையு நேசனல் மெடிகல் யுனிவர்சிடியில், மூன்றாமண்டு மருத்துவம் படித்து வருகிறார். ரஷ்யா – உக்ரைன் இடையே போர் மூண்டுள்ள நிலையில், தங்களை மீட்க இந்திய அரசு உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்தும், அங்குள்ள நிலை குறித்தும் மாணவி மவுனிசுகிதா, வாட்ஸ் அப் மூலம் பேசி, பெற்றோருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
அதன் விபரம்: ”நாங்கள் இப்போது உக்ரைனின் லீவ் (lviv) பகுதியில் உள்ளோம். இங்கு 50 தமிழர்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியரும் இருக்கிறோம். இங்கு ராணுவத்தினர் யாரும் இதுவரை (இன்று மாலை) வரவில்லை. நாங்கள் இருக்கும் பகுதி போலந்து அருகே உள்ளது. 80 கி.மீ. தொலைவில் போலந்து இருந்தாலும், எங்களால் அங்கு போக முடியாத நிலை உள்ளது. விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வாடகைக் கார்கள் கிடைக்கவில்லை. ரயில், பேருந்தும் இயக்கப்படவில்லை.
எங்களது வங்கிக் கணக்கில் பணம் இருந்தாலும், டாலரில் கேட்டால் கொடுக்க மறுக்கின்றனர். ஏடிஎம்களில் காலையில் நீண்ட வரிசை இருந்தது. மாலையில் அனைத்து ஏடிஎம்களும் மூடப்பட்டு விட்டன. உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எங்களுக்குக் கிடைத்த பொருட்களைக் கொண்டு ஒரு வாரத்திற்கு சமாளிக்க முடியுமா என்ற சந்தேகம் உள்ளது.
கடந்த ஒரு வாரமாக விமானத்தில் ஊர் திரும்ப முயற்சித்தோம். டர்கி – சார்ஜா வழியாக இந்தியா வர திட்டமிட்டோம். டர்கி நாட்டு விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு விசா கொடுக்க மறுத்துவிட்டனர். நாங்கள் வசிக்கும் லிவ் நகரத்தில் இருந்து விசா இல்லாமல் விமானம் ஏற முடியாது என்று பலரையும் திருப்பி அனுப்பி விட்டனர்.
இந்தியாவில் இருந்து உக்ரைன் தலைநகர் கிவ் (kyiv) விற்கு விமானம் அனுப்பியதாக சில நாட்களுக்கு முன்பு கூறினார்கள். ஆனால், அதற்கு கட்டணம் அதிகமாக இருந்தது. இந்திய விமானத்தில் பயணிக்க, நாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து 8 மணி நேரம் பயணிக்க வேண்டும். அதனால், எங்களால் போக முடியவில்லை. உக்ரைனில் 15 ஆயிரம் மாணவர்கள் இங்கு இருக்கிறோம். அவர்களைக் காப்பாற்ற இந்திய அரசு போதுமான விமானங்களை அனுப்பவில்லை.
நாங்கள் விமான பயணத்திற்கு இந்திய தூதரகத்தை அணுகினோம். அவர்களிடம் இருந்து உதவி கிடைக்கவில்லை. வேலை நேரத்தில் கூட தூதரக போன் அழைப்பை எடுக்கவில்லை. யாரை அணுகுவது என்று தெரியவில்லை. அதற்குள் போர் அறிவித்து விட்டனர். உக்ரைனில் மூன்று எல்லைகளையும் ரஷ்ய ராணுவம் வளைத்து விட்டது. நாங்கள் வசிக்கும் பகுதியில் காலையில் சைரன் ஒலித்தது. விமானங்கள் பறந்து சென்றன” என்ற் அவர் தெரிவித்துள்ளார்
மாணவி மவுனிசுகிதாவின் பெற்றோர் கூறும்போது, ‘போர் நடக்கும் இடத்தில் தவிக்கும் எங்கள் மகளின் பதிவைக் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம். எங்கள் மகளையும், அங்குள்ள இந்தியர்களையும் மீட்டுத்தர மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.