புதுடெல்லி: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் 20 ஆயிரம் பேர், உக்ரைனில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை படித்து வருகின்றனர். இவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே 5 ஆயிரம் பேர் உள்ளனர். உக்ரைனை போர் மேகம் சூழ்ந்ததும், இவர்களை உடனடியாக நாடு திரும்பும்படி ஒன்றிய அரசு பலமுறை வலியுறுத்தியது. ஆனால், அங்கு நிலைமை அவ்வளவு மோசமாக இல்லை என்று கூறி, பெரும்பாலான மாணவர்கள் நாடு திரும்பவில்லை. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன் ஒன்றிய அரசு இயக்கிய சிறப்பு விமானத்தில் 200 மாணவர்கள் திரும்பி வந்தனர். நேற்றும் மாணவர்களை அழைத்து வர சிறப்பு விமானங்கள் அனுப்பப்பட்டன. அவை உக்ரைனை நெருங்கும் முன்பாக, அந்நாட்டின் மீது ரஷ்ய படைகள் தாக்குதலை தொடங்கி விட்டன. இதனால், உக்ரைன் தனது வான் எல்லையை மூடியது. இதனால், இந்திய சிறப்பு விமானங்கள் திரும்பி வந்து விட்டன.தற்போது போர் தீவிரமாகி வருவதால், இவர்களால் நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பாதுகாப்பு குறித்து உக்ரைன் தலைநகர் கிவ்வில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவுரையில், ‘உக்ரைனில் தற்போது நிச்சயமற்ற சூழல் நிலவகிறது. மாணவர்கள் அனைவரும் அமைதியை கடைபிடிக்க வேண்டும். எங்கு இருக்கிறீர்களோ, அங்கேயே பாதுகாப்புடன் இருங்கள். தலைநகர் கிவ்வுக்கு வந்து கொண்டு இருப்பவர்கள், தங்களின் இருப்பிடத்துக்கு திரும்பிச் செல்லுங்கள். மேற்கு எல்லை நாடுகளின் அருகே பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விடுங்கள்,’ என கூறப்பட்டுள்ளது. * உக்ரைனில் வசிக்கும் இந்தியர்களை அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு சென்று பாதுகாப்பாக தங்கும்படி இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.* ஏற்பாடு செய்யாதது ஏன்? காங். கேள்விகாங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘`மக்களின் இக்கட்டான நேரங்களில் உதவாமல், அமைதியாக இருப்பதே மோடி அரசின் வழக்கமாகி விட்டது. உக்ரைனில் உள்ள இந்தியர்கள் உயிருக்கு பயந்து, அச்சத்துடன் இருக்கின்றனர். 20,000 இந்தியர்கள் இருப்பதாக கூறும் ஒன்றிய அரசு, அவர்களை உரிய நேரத்தில் தாய்நாடு அழைத்து வர உடனடியாக ஏற்பாடு செய்யவில்லை. இது தான் தற்சார்பு இந்தியாவா? மக்களை பாதுகாக்க வேண்டிய பிரதமர் மாநிலத் தேர்தல்களில் பிசியாக இருப்பதால், அவர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கேயே இருக்கும்படி ஒன்றிய அரசு அறிவுறுத்தி இருப்பது வேதனை தருகிறது,’ என கூறியுள்ளார்.