வாஷிங்டன்:
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்புக்கு கூட்டு பதிலடியை கொடுக்கும் நடவடிக்கை தொடர்பாக ஜி-7 நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பைடன், ரஷியாவுக்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்தார்.
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் நான்கு பெரிய ரஷிய வங்கிகளின் சொத்துக்களை முடக்கும் என்றும், ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கும் என்றும் பைடன் தெரிவித்தார்.
புதின் ஒரு ஆக்கிரமிப்பாளர் என்றும், போரைத் அவர் தேர்ந்தெடுத்தார் என்றும், அதன் மூலம் அவரும், ரஷியாவும் பொருளாதார தடைகளின் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்றும் பைடன் குறிப்பிட்டார்.
ரஷியப் படைகளை எதிர்த்துப் போரிட உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளை அனுப்புவதை பைடன் திட்டவட்டமாக நிராகரித்தார்.
ரஷியாவிற்கு எதிராக உலகம் ஒன்று பட்டுள்ளதாக, ரஷியாவிடம் இருந்து எந்த சைபர் தாக்குதல்கள் நடந்தாலும் அதற்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அவர் எச்சரித்தார்.
நேட்டோ நட்பு நாடுகளுக்கு எதிரான எந்தவொரு ரஷிய ஆக்கிரமிப்பிலிருந்தும் அவர்களைப் பாதுகாக்க அமெரிக்கா கூடுதல் படைகளை அனுப்பும் என்றும் பைடன் அறிவித்தார்.
உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவுடன், இந்தியா இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த பைடன், இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் கலந்தாலோசித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதையும் படியுங்கள்…
போரை உடனே நிறுத்துங்கள்… ரஷிய அதிபர் புதினிடம் மோடி வேண்டுகோள்