உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனுக்கு உதவ நேட்டோ படைகளை அனுப்பும் திட்டம் இல்லை என அந்த அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ள ராணுவ கூட்டமைப்பு தான் நேட்டா ஆகும். அமெரிக்கா தலைமையிலான இந்த கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள எந்தவொரு நாடு மீது ஆயுத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஓரணியாக சேர வேண்டும் என்பது ஒப்பந்தமாகும்.
இந்த நிலையில், நேட்டோ அமைப்பில் தங்களையும் உறுப்பினராக சேர்க்குமாறு உக்ரைன் அதிபர் வலியுறுத்தியதை அடுத்து தான், உக்ரைன் – ரஷ்யா இடையேயான மோதல் அதிகரித்தது.
உக்ரைனை நேட்டோ படையில் சேர்க்க அமெரிக்காவும் முயற்சித்து வரும் நிலையில், அதனை விரும்பாத ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. இந்த நிலையில், நேட்டோ படைகளை உக்ரைனுக்கு அனுப்பும் திட்டமில்லை என அதன் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, போர் சூழல் குறித்து விவாதிக்க நேட்டோ நாடுகள் நாளை அவசர ஆலோசனை நடத்தவுள்ளன.