கீவ்: ‛தங்களது தரை வழி மற்றும் வான்வழி தாக்குதலால் உக்ரைன் ராணுவ வீரர்கள் சரணடைந்து வருவதாக ரஷ்ய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. தரைவழி மற்றும் வான்வழியாக தாக்குதல் நடத்துவதால், உக்ரைன் படைகள் திணறி வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து குண்டுமழை பொழிந்து வருகின்றன. இதனையடுத்து, லூகான்ஸ்க் பகுதியில் 2 நகரங்களை கைப்பற்றியதாக ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய தாக்குதல் பதற்றம் காரணமாக மக்கள் பாதுகாப்பு இடங்களுக்கு செல்ல வாகனங்களில் ஒரே நேரத்தில் சென்றதால், பல இடங்களில் சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டு, பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அங்குள்ள ஏ.டி.எம்.,களிலும் மக்கள் கூட்டமாக குவிந்தனர். பலரும் பணமெடுக்க குவிந்ததால், ஒருநாளைக்கு 10 ஆயிரம் அளவிற்கு மட்டுமே பணம் எடுக்க அந்நாடு கட்டுப்பாடு விதித்துள்ளது.
இதற்கிடையே ரஷ்ய போர்க்கப்பல்கள் துருக்கி கடற்பகுதி வழியாக கருங்கடல் பகுதிக்கு வர விடாமல் தடுக்க, பாஸ்பொரஸ் மற்றும் டார்டனெல்லஸ் கடல் வழியை மூடுமாறு துருக்கி அரசுக்கு உக்ரைன் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த நிலையில், கார்கிவ் நகரம் அருகே உள்ள உக்ரைனின் விமானத்தளம், ரஷ்யாவின் வான்வெளி தாக்குதலில் தீப்பற்றி எரிவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரை வழி மற்றும் வான்வழி தாக்குதலை தொடர்ந்து உக்ரைன் ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைந்து வருவதாக ரஷ்ய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
Advertisement