டெல்லி: உக்ரைன் போர் எதிரொலியாக தங்கம், கச்சா எண்ணை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பங்கு சந்தைகளும் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இன்று ஒரேநாளில், இந்தியாவில் தங்கத்தின் விலை . ரூ.864 உயர்ந்து உயர்ந்து புதிய உச்சத்துக்கு சென்றுள்ளது. இது பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி உக்ரைன் மீது, ரஷியா இன்று போர் தொடுத்துள்ளது.இந்த தாக்குதலாம் உலக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா உள்பட உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஐ.நா.வும் ரஷியாவின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்த நிலையில், உக்ரைன்- ரஷ்யா போர் எதிரொலியால் தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.864 உயர்ந்து, ரூ.38,616 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.108 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.4,827க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதுபோல வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.1.90 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.70.60 க்கும் ஒரு கிலோ ரூ.70,600 க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலை மட்டுமின்றி பங்கு சந்தைகளும் கடுமையான சரிவை சந்தித்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,002.97 புள்ளிகள் சரிந்து, 55,229.09 புள்ளிகளில் வணிகமாகிறது.
இதுபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 586.25 புள்ளிகள் குறைந்து, 16,477 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போரால் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டி, பொருளாதார சிக்கலையும் உருவாக்கி உள்ளது.