உக்ரைன் ரஷ்யா போர்: போன் போட்டா எடுக்க மாட்றாங்க – மாணவர்கள் குற்றச்சாட்டு!

உக்ரைன்
மீடு
ரஷ்யா
போர் தொடுத்துள்ளது. உக்ரைன் நாட்டின் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா பல்முனை தாக்குதலை நடத்தி வருகிறது. மேலும், ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அந்நாட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டில் இருந்து நாடு திரும்ப விரும்புவோருக்கான சிறப்பு விமானங்களை இயக்குவதாக ஏர் இந்தியா அறிவித்தது. அதன்படி, முதல் விமானம் சுமார் 200க்கும் மேற்பட்ட இந்தியர்களை தாயகம் அழைத்து வந்துள்ள நிலையில், போரின் காரணமாக உக்ரைன் செல்ல முடியாமல் நடு வானில் சிக்கிய இரண்டாவது விமானம் மீண்டும் இந்தியா திரும்பியுள்ளது.

போர் நின்ற பிறகே விமானங்களை இயக்குவது பற்றி முடிவெடுக்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனாலும், உக்ரைனில் சிக்கி இருக்கும் இந்தியர்களை அதன் அண்டை நாடுகளுக்கு அழைத்து செல்ல அந்நாடுகளுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதனிடையே, உக்ரைனில் உள்ள இந்தியர்களின் உதவிக்காக டெல்லியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. உதவிக்கு 1800 118 797 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், உக்ரைன் நாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் 044-28515288 / 6000 23645 / 99402 56444 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும், www.nrtamils.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக உதவிகள் கோரலாம் என தமிழக அரசும் தனியாக உதவி எண்களை அறிவித்துள்ளது.

அதேபோல், ஏதேனும் உதவி தேவைப்பட்டால் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை +380 997300428, +380 997300483 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். [email protected] என்ற இ-மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் மத்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருங்கள் என அறிவுறுத்தியுள்ள மத்திய அரசு, விடுதிகள், வீடு அல்லது எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அங்கேயே பத்திரமாக இருக்குமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை என அங்கு சிக்கித் தவித்து வரும்
இந்திய மாணவர்கள்
குற்றம் சாட்டியுள்ளனர்.

உக்ரைன் தலைநகரில் உள்ள இந்திய தூதரகம் எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை, டாக்ஸி பேருந்துகள் எதுவும் இல்லாததன் காரணமாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியாமல் இருப்பதாகவும் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இந்திய தரப்பில் விடுதிகளில் தங்குமாறு கூறுகின்றனர். ஆனால், அது பாதுகாப்பாக இருக்குமா என்பது தெரியாது எனத் தெரிவிக்கும் அவர்கள், உக்ரைனில் போர் விமானங்கள் சத்தம் தொடர்ந்து கேட்பதாகவும் தங்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.