புதுடெல்லி:
உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருவதால், பொதுமக்கள் கடுமையான இன்னல்களை எதிர்கொள்கின்றனர். வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை ரஷியா நடத்தி வருகிறது. தலைநகரில் உள்ள உக்ரைன் உளவுத்துறை அலுவலகத்தையும் ரஷிய படை குண்டு வீசி தகர்த்துள்ளது. கிழக்கு உக்ரைன் முழுவதும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்கிறது. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதில் பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக, இந்தியா இதில் தலையிட்டு போரை நிறுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ரஷிய அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் மோடி பேச வேண்டும் என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் டாக்டர் இகோர் போலிகா கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக இந்திய பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித் ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கிய மந்திரிகள் பங்கேற்க உள்ளனர்.
உக்ரைனில் அமைதி திரும்புவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், இந்தியாவின் பங்களிப்பு குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக ஏற்படும் பொருளாதார தாக்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வின் தாக்கத்தை குறைப்பதற்கான வழிகள் பற்றியும் ஆலோசிக்கப்படலாம்.
உக்ரைன் விவகாரத்தில் நடுநிலை வகிப்பதாகவும், அமைதியான தீர்வு ஏற்படும் என நம்புவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவதால் அங்குளள் இந்தியர்களை மீட்பதற்காக இந்திய தூதரகம் சார்பில் சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆனால் வான்வழி மூடப்பட்டதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. உக்ரைன் சென்ற ஏர் இந்தியா விமானம் மீண்டும் டெல்லிக்கே திரும்பியது. இதனால் இந்தியர்களை மாற்று வழிகள் வழியாக வெளியேற்றும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.