பார்பேட்டா: அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹபிஸூர் அக்ஹாந். காய்கறி வியாபாரம் செய்து வரும் அவருக்கு சொந்தமாக ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. கடந்த ஒராண்டாக அதற்காகபணம் சேகரிக்க ஆரம்பித்தார்.
அன்றாடம் வரும் வருவாயில் கொஞ்சம் சில்லறைகளை உண்டியலில் போட்டு சேகரித்து வந்தார். ‘சுசூகி ஆக்சஸ் 125’ ஸ்கூட்டரை வாங்க விரும்பிய அக்ஹாந், சுசூகிநிறுவனம் நடத்திய வாகன விற்பனை முகாமுக்குச் சென்று, தனது விருப்பத்தைக் கூறியுள்ளார். இதையடுத்து, அவரது உண்டியல் சேமிப்பு பணம் ஒரு சாக்குப்பையில் கட்டப்பட்டு பார்பேட்டாமாவட்டத்தில் உள்ள சுசூகி ஷோரூமுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
ஷோரூம் ஊழியர்கள் சாக்குப் பையில் இருந்த மொத்த சில்லறைகளையும் எண்ணி முடிக்க மூன்றுமணி நேரம் ஆகியுள்ளது. மொத்தமாக அதில் ரூ.22,000 இருந்துள்ளது. மீதமுள்ள தொகை பைனான்ஸ் மூலமாக செலுத்தப்பட்டதாக தெரி விக்கப்பட்டுள்ளது.
அசாமைச் சேர்ந்த யூடியூபர் ஹிராக் தாஸ் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டதன் வழியே இந்த நிகழ்வு பரவலான கவனத்துக்குச் சென்றது. ஹபிஸுர் அக்ஹாந்தின் கடின உழைப்பையும், பொறுமையையும் சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.