உலகின் அழகிய கட்டடம் துபாயில் கோலாகல திறப்பு| Dinamalar

துபாய் :துபாயில் மிகப் பிரமாண்டமான ‘எதிர்கால அருங்காட்சியகம்’ திறக்கப்பட்டுள்ளது. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த துபாயில், ‘புர்ஜ் கலிபா’ என்ற உலகின் மிக உயரமான வர்த்தக கட்டடம் உள்ளது. இதையடுத்து, உலகிலேயே மிக அழகான கட்டடம் என்ற சிறப்பை எதிர்கால அருங்காட்சியகம் பெற்றுள்ளது.
ஷான் கில்லா என்ற கட்டடக் கலை வல்லுனர் வடிவமைத்த இந்த அருங்காட்சியகத்தை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீம் அல் மக்தும் திறந்து வைத்தார். திறப்பு விழாவின்போது வாண வேடிக்கை, இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

லேசர் ஒளிக்காட்சிகள் பார்வையாளர்களை கவர்ந்து இழுத்தன. 3.23 லட்சம் சதுர அடி பரப்பில், 252 அடி உயர கோள வடிவில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தை கட்டி முடிக்க, ஒன்பது ஆண்டுகள் ஆகின.இந்த கட்டடம், ‘ரோபோ’ க்கள் வாயிலாக, உருக்கில் செய்த 1,024 கலை வடிவங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் எதிர்கால வாழ்க்கை குறித்த புதிய சிந்தனைகளுடன் எண்ணற்ற புதுமைப் பொருட்கள் இங்கு வைக்கப்பட்டு உள்ளன.
ஆண்டுக்கு, 4,000 மெகாவாட் சூரிய மின்சக்தியில் இந்த அருங்காட்சியகம் இயங்க உள்ளது. இங்குள்ள இரண்டு தளங்கள், கருத்தரங்க நிகழ்ச்சிகள் நடத்த ஒதுக்கப்பட்டுள்ளன. துபாயின் மணி மகுடத்தில் மேலும் ஒரு வைரக் கல்லாக, மிக அழகான கட்டடம் திகழப் போகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.