வாஷிங்டன்: கரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகளை தயாரித்து மிகக் குறைந்தவிலையில் உலகம் முழுவதற்கும் விநியோகித்த இந்திய நிறுவனங்களை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பாராட்டியுள்ளார்.
இந்தியா-அமெரிக்கா இடையிலான சுகாதாரத்துறை உறவு தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட காணொலி கருத்தரங்கில் அவர் கூறியதாவது:
கடந்த ஆண்டு வரையிலான காலத்தில் 100 நாடுகளுக்கு 15 கோடிதடுப்பூசி மருந்துகளை இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்துள்ளன. இதன் காரணமாக குழந்தை உயிரிழப்புக்குக் காரணமாக அமையும் நிமோனியா மற்றும் ரோட்டா வைரஸ் நோய்களுக்கான தடுப்பூசியை உலகம் முழுவதும் இலவசமாக அளிக்க அந்தந்த நாட்டு அரசுகள் முன்வந்துள்ளன.
கரோனா பெருந்தொற்று இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. இப்போதைய சூழலில் இதையும் தாண்டி அவசரகால நடவடிக்கையாக உலகம் முழுவதும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.
அறிவியல் தொழில்நுட்பம் மூலமாக உலகை அச்சுறுத்தும் நோய்களிலிருந்து மக்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக் காட்டியதை நினைவுகூர்கிறேன்.
இந்தியாவில் தயாராகும் கோவாக்ஸின், கோர்பாவேக்ஸ், கோவிஷீல்டு ஆகிய மூன்று தடுப்பூசி மருந்துகள் எல்லைகடந்த பிணைப்பை உருவாக்கியுள்ளன.
உலகம் முழுவதும் இப்போது கரோனா பெருந்தொற்றின் தீவிரம் பெருமளவு குறைந்துள்ளது. ஆனால் அடுத்த பெருந்தொற்று உருவாவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இத்தகைய சூழலில் உலக நாடுகளின் தடுப்பூசிமருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
– பிடிஐ