உலக நாடுகளுக்கு மலிவு விலையில் இந்தியா தடுப்பூசி: பில்கேட்ஸ் பாராட்டு

வாஷிங்டன் :

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம், இந்திய- அமெரிக்க சுகாதார கூட்டாண்மை குறித்து காணொலிக்காட்சி வழியாக வட்டமேஜை மாநாடு ஒன்றை நடத்தியது.

உலக நாடுகளுக்கு மலிவு விலையில் தடுப்பூசிகள் கிடைக்க, இந்திய அமெரிக்க கூட்டுறவை மேம்படுத்தும் வகையில், இரு நாடுகளின் முக்கிய பங்குதாரர்களை ஒருங்கிணைப்பதுதான் இந்த மாநாட்டின் நோக்கம் ஆகும்.

இதில் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியாவின் தடுப்பூசி தயாரிப்பு திறமைகளையும், உலகுக்கு மலிவு விலையில் தடுப்பூசிகளை வழங்குவதற்கான நாட்டின் தடுப்பூசி உற்பத்தியாளர்களின் முயற்சிகளையும் பாராட்டினார்.

மேலும் அவர் பேசுகையில் கூறியதாவது:-

கடந்த ஆண்டு இந்தியா 15 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகளை கிட்டத்தட்ட 100 நாடுகளுக்கு வழங்கி உள்ளது.

இந்த தருணத்தில் இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு நன்றி.

இப்போது கிட்டத்தட்ட உலகின் ஒவ்வொரு நாடும் நிமோனியா மற்றும் ரோட்டோவைரஸ் போன்ற நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க தடுப்பூசிகளை வழங்குகின்றன. இந்த நோய்கள் பல பத்தாண்டுகளாக குழந்தைகளுடைய இறப்புகளுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

கொரோனா பெருந்தொற்று நோய் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

எனவேதான் நாங்கள் அவசர கால பதிலளிப்புக்கு அப்பால் பார்க்கத்தொடங்கி இருக்கிறோம். இதன் அர்த்தம், கொரோனா நோயை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, எதிர்காலத்தில் ஏற்படுகிற தொற்று நோய்கள், தொற்றுநோய்களாக மாறுவதற்கு முன்பாக அதைத் தடுக்க தயாராக இருப்பதும், அனைத்து தொற்று நோய்களையும், எதிர்த்துப்போராடுவதும் ஆகும்.

அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் புதிய தயாரிப்புகளை உருவாக்குவதற்கு, நாட்டின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப திறமைகளை தொடர்ந்து பயன்படுத்துவதன்மூலம் உலக சுகாதாரத்துக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை ஆழமாக்குவது குறித்து பிரதமர் மோடி பேசி இருக்கிறார்.

இதை நனவாக்க பகிரப்பட்ட லட்சியம் மற்றும் கூட்டாண்மைகள் மிக முக்கியம்.

கோவேக்சின், கோர்பாவேக்ஸ் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் துறைகளையும், எல்லைகளையும் இணைக்கும் கூட்டாண்மையின் தயாரிப்புகள் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிக்கலாம்…
ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களை ஒமைக்ரானின் புதிய வடிவமும் தாக்க வாய்ப்பு: ஆய்வு தகவல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.