ஒரு பெண்ணிடம் ஐ லவ் யூ என்று ஒரு முறை கூறுவது பாலியல் தொல்லை ஆகாது என மும்பை போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2016ஆம் ஆண்டு மும்பையில் இளைஞர் ஒருவர் தங்களது மகளிடம் ஐ லவ் யூ என்று கூறியதாக அவளது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். அந்த இளைஞர் தங்களது மகளைப் பார்த்து முறைத்ததுடன் கண் சிமிட்டியதாகவும் அவர்கள் கூறியிருந்தனர்.
அதன்பேரில், வாடாலா டி.டி. காவல்துறையினர், 23 வயது இளைஞர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மும்பை போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி கல்பனா பாட்டீல், குற்றஞ்சாட்டப்பட்டவர் மீதான குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரை விடுவிப்பதாக அறிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கூற்றுப்படி, குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர், அவளிடம் ஒரு முறை ஐ லவ் யூ என்று கூறியுள்ளார் – அந்தப் பெண்ணை தொடர்ந்து பின்தொடர்ந்து சென்று ஐ லவ் யூ என்று கூறியதாக வழக்குத் தொடரப்படவில்லை என்றும் நீதிபதி கல்பனா பாட்டீல் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவரிடம் ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ ஒரு முறை கூறுவது அன்பின் உணர்வை வெளிப்படுத்துவதாகத்தான் இருக்கும் என நீதிபதி கூறினார். பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணியத்தை குறைக்கும் நோக்கில் இச்செயலைச் செய்ததாக கூற முடியாது எனவும் நீதிபதி கல்பனா பாட்டீல் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM