'ஒரேநாளில் அழிக்கப்பட்ட ராணுவத் தளங்கள்' – உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலும் உலகளாவிய அதிர்வுகளும்

பல வாரங்களாக நீடித்து வந்த பதற்றம் ஒரே நாளில் உக்கிரமடைந்து, உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி தாக்குதல் நடத்திவரும் நிலையில், ரஷ்ய படைகள் முன்னேறும் வேகத்தைப் பார்க்கும்போது, உலக அளவில் பெரும் பதற்றமும் கவலையும் அதிகரித்துள்ளது. உக்ரைனின் 11 விமானப்படைத் தளங்கள் உள்ளிட்ட 70 ராணுவத் தளங்களை ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டதாக கூறுகிறது ரஷ்யா. அதேவேளையில், தலைநகர் கீவ் நகரில் தாக்குதல் நடந்து வருவதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய அதிருப்தி இன்று, நேற்று தோன்றியது அல்ல. கடந்த 2014-ஆம் ஆண்டு உக்ரைனில் நடைபெற்று வந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இதனையடுத்து உக்ரைனை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ரஷ்யா முயன்று வருகிறது.அதன் நீட்சிதான் இப்போது ஏற்பட்டுள்ள மோதல். கடந்த நவம்பர் மாதம் தொடங்கி பல வாரங்களாகவே பதற்றம் நிறைந்து காணப்பட்ட நிலையில் தற்போது தாக்குதல் தீவிரமாகத் தொடங்கியிருக்கிறது.

இந்திய நேரப்பட்டி காலை 8.30 மணியளவில் ரஷ்ய அதிபர் புதின் உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை அறிவித்தார்.

புதினின் உக்கிரமான பேச்சு! – போர் என்று பிரகடனப்படுத்தாமல் மிகவும் நேர்த்தியாக வார்த்தைகளைக் கையாண்டு ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிடுவதாகப் பேசிய புதின் “உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிடுகிறேன். இதன் நோக்கம், கடந்த 8 ஆண்டுகளாக உக்ரைன் ஆட்சியாளர்களால் சில மக்கள் இன அழிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அவர்களின் துயரத்துக்கு முடிவு காண தாக்குதலுக்கு உத்தரவிடுகிறேன். உக்ரைனில் இருந்து நேட்டோ ஆதாரவுப் படைகள் பின்வாங்க வேண்டும். உக்ரைன் நாஜிக்களின் கூடாரமாகியுள்ளது. உக்ரைன் வீரர்களே உங்களின் ஆயுதங்களை கீழே போடுங்கள்.

ரஷ்யா, உக்ரைன் விவகாரத்தில் யாராவது தலையிட நினைத்தாலோ, எங்கள் மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறினாலோ, நாங்கள் உடனடியாக தகுந்த பதிலடி கொடுப்போம். அதன் விளைவுகள் வரலாறு இதுவரை சந்தித்திராததாக இருக்கும்.

உக்ரைனை ஆக்கிரமிப்பது எங்கள் நோக்கம் அல்ல. நாங்கள் உக்ரைனை ஆக்கிரமிக்க மாட்டோம். உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்றே விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார். வரலாறு காணாத விளைவு என்ற ரஷ்ய அதிபரின் எச்சரிக்கையை அமெரிக்கா உள்ளிட்ட அதன் சார்பு நாடுகளும் நேட்டோ படைகளும் மிகவும் கூர்ந்து கவனித்து வருகின்றன.

என்ன சொல்கின்றன உலக நாடுகள்? – இதற்கிடையில், ’உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலால் மிகப்பெரியளவில் உயிரிழப்பு ஏற்படும். இதற்கு புதினே பொறுப்பேறக வேண்டியிருக்கும்’ என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்தார். பிரிட்டன் பிரதமர் போர் ஜான்சன், ’ரஷ்ய அதிபர் ரத்தப் பாதையை அழிவுப் பாதையை தேர்வு செய்துள்ளார். பிரிட்டன் தகுந்த பதிலடி கொடுக்கும்’ என்று கூறியுள்ளார். அமெரிக்கா, ரஷ்ய அதிபர்கள் சந்திப்புக்கு முயன்று வந்த பிரான்ஸ் அதிபர் இமானுவே மேக்ரோன், ’போரை முடிவுக்குக் கொண்டு வர பேசி வருகிறோம். உக்ரைனுக்கு தோள் கொடுப்போம்’ என்று கூறியுள்ளார். இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி, ’ரஷ்ய நடவடிக்கை எந்த வகையிலும் நியாயமானது இல்லை’ என்று கூறியுள்ளார். ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, ’ரஷ்ய செயல்பாடு சர்வதேச அமைதியைக் குலைக்கும்’ என்று கூறியுள்ளார்.

இப்படி சில நாடுகள் தங்களின் கண்டனங்களை மேலோட்டமாக பதிவு செய்ய, மற்ற ஐரோப்பிய நாடுகள் மவுனம் காக்கின்றன. ரஷ்யாவின் இயற்கை எரிவாயு தயாரிப்புச் சந்தையை ஐரோப்பிய நாடுகள் சார்ந்துள்ளன. இந்நாடுகளின் 65% எரிவாயு தேவை ரஷ்யாதான் குழாய் மூலம் பூர்த்தி செய்கிறது. இதனாலேயே ஐரோப்பிய நாடுகள் பலவும் மவுனம் காப்பதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவின் நடுநிலைமை?உக்ரைன் பிரச்சினையில் இந்தியா நடுநிலைமையைக் கடைப்பிடிப்பதாகக் கூறியுள்ளது. வெளியுறவு இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் கூறுகையில், ’உக்ரைன் ரஷ்யா மோதல் விவகாரத்தை இந்தியா நடுநிலைமையாகவே அணுகுகிறது. பெரிய நன்மைகளுக்காக இரண்டு நாடுகளும் அமைதியை நாட வேண்டும்’ என்றார்.

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் பேசிய இந்தியப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி ,”உடனடியாக இருதரப்பும் படைகளைத் திரும்பப் பெற வேண்டும். பதற்றமான சூழலைத் தணிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அங்கு தற்போதுள்ள சூழலைப் பார்க்கும்போது இது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கலாம் என்ற அச்சம் ஏற்படுகிறது. இந்த சர்ச்சையில் சம்பந்தப்பட்ட அனைவரின் பாதுகாப்புமே கருத்தில் கொள்ளப்பட வேண்டும்’ என்று நடுநிலைமையாகவே கருத்து கூறியுள்ளார்.

ஆனால், ’ரஷ்யாவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும். அதனை நிச்சயமாக ரஷ்யா ஏற்கும்’ என்று உக்ரைன் தூதர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் ஐகர் பொலிகா, “நான் எனது மாணவப் பருவத்திலிருந்து இந்திய வரலாறு பற்றியும் அதன் ராஜதந்திரங்கள் பற்றியும் அறிவேன். உங்கள் நாட்டில் தான் சாணக்கியர் இருந்தார். அவர் வாழ்ந்த காலத்தில் ஐரோப்பாவின் பெரும்பான்மையான பகுதிகளில் நாகரிகமே வளரவில்லை. மகாபாரதம் தந்த நாடு உங்களுடையது.

மகாபாரதத்தில் போர் வருவதற்கு முன்னரே அதனைத் தடுக்கும் உத்திகள் கூறப்பட்டுள்ளன. மேலும், இந்தியா பஞ்சீல கொள்கையை வகுத்த தேசம். அதனால் தான் இந்தியாவிடம் உதவிக்காக வேண்டி நிற்கிறோம். இந்தியா, ரஷ்யா இடையே நல்லுறவு இருக்கிறது. பிரதமர் மோடி சொன்னால் நிச்சயம் புதின் செவிசாய்ப்பார்” என்று கூறியுள்ளார்.

இப்படியாக உலக நாடுகள் பலவும் தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்து வருகின்றன.

ஒரே நாளில் உக்கிரம்… – இந்திய நேரப்பட்டி காலை 8.30 மணியளவில் ரஷ்ய அதிபர் புதின் உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை அறிவித்தார். அடுத்த சில மணி நேரங்களிலேயே ரஷ்யா தனது படைகள் உக்ரைனின் விமானப்படை கட்டமைப்பை முற்றிலுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாகக் கூறியுள்ளது. பொதுமக்கள் எங்கள் குறி அல்ல என்று ரஷ்யா கூறினாலும் கூட, ரஷ்ய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 9 பேர் பலியாகியுள்ளதாகவும், ராணுவ வீரர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பழியாகிவிட்டதாகவும் முதற்கட்ட தகவலில் உக்ரைன் கூறியுள்ளது. அதேவேளையில், உக்ரைனுக்குள் முனேறி செல்லச் செல்ல உக்ரைன் படைகள் தங்களிடம் சரணடைந்து வருகின்றன என ரஷ்யா தெரிவித்துள்ளது.

டான்ஸ்க், லாஹன்ஸ்க்குடன் முடிந்துவிடுமா? – அண்மையில் உக்ரைனின் 2 மாகாணங்களை தனி நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்தது. உக்ரைனில் 24 மாகாணங்கள் உள்ளன. இதில் ரஷ்ய எல்லையில் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள டான்ஸ்க், லாஹன்ஸ்க் மாகாணங்களில் ரஷ்ய வம்சாவளியினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அந்த மாகாணங்களை சேர்ந்த கிளர்ச்சிக் குழுக்கள், உக்ரைன் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றன. இதற்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் டான்ஸ்க், லாஹன்ஸ்க் பகுதிகளின் தலைவர்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி இரு பகுதிகளையும் தனி நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்தது. இப்போது கிளர்ச்சியாளர்கள் டான்ஸ்க், லாஹன்ஸ்க் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக வந்துவிட்டது என கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். ஆனால், ரஷ்ய அதிபர் இன அழிப்புக்கு எதிராக போராடுகிறோம் என்று கூறியதுபோல் இந்த இரண்டு மாகாணங்களுடன் ரஷ்ய தாக்குதல் முடிந்துவிடுமா, போர் ஓரிரு நாட்களில் முடிந்துவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனெனில் இப்போது வரை உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்த நேட்டோ படைகள் தயார் நிலையில் மட்டுமே இருக்கின்றன. ரஷ்ய படைகள் முன்னேறிச் செல்ல என்ன மாதிரியான எதிர்வினை வரும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

வலிமை காட்டும் புதின்.. – இதற்கிடையில் ரஷ்ய அதிபர் புதின் அமெரிக்காவுக்கு, தனது எல்லைக்கு அருகே ஒரு சிறிய நாட்டுக்கும் தனது முழு வலிமையையும் காட்டவே இந்த ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ர்ஷ்யா ஏற்கெனவே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த க்ரீமியா வழியாக தனது படைகளை உக்ரைனுக்குள் அனுப்பியுள்ளது. உக்ரைன் மீது கிழக்கு, வடக்கு, தெற்கு என்று மூன்று வழிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்துகிறது. இதுவரை நேட்டோ படைகள் எவ்வித எதிர்ப்பும் காட்டாத நிலையில் இப்போதைக்கு வலிமையுடன் ஒன் மேன் ஷோ காட்டிக் கொண்டிருக்கிறார் புதின். அடுத்ததாக துறைமுகத்தையும் ரஷ்ய படைகள் குறிவைத்துள்ள நிலையில் அண்டைநாடான மால்டோவா, உக்ரைனில் இருந்து வருவோருக்கு தஞ்சம் அழிப்போம் என்று அறிவித்துள்ளது.

தவிக்கும் மாணவர்கள்: உக்ரைன், ரஷ்ய மோதலுக்கு இடையே கவனிக்கப்பட வேண்டியவர்களாக இந்திய மாணவர்கள் உள்ளனர். உக்ரைனில் உள்ள பல்கலைக்கழகங்களில் 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர். இந்நிலையில், போர் மேகம் சூழ்ந்துள்ள இடங்களில் இருந்து இந்தியர்களை, குறிப்பாக மாணவர்களை மீட்பது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்தது. பிப்.22, 24, 26 தேதிகளில் ஏர் இந்தியா சிறப்பு விமானங்களை இயக்குவதாக இருந்தது. இதில் பிப்.22 உக்ரைன் சென்ற விமானம் 182 பயணிகளுடன் இன்று காலை இந்தியா திரும்பியது. ஆனால், இன்று பிப் 24 உக்ரைன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே மீண்டும் டெல்லி திரும்பியது. இந்நிலையில் இந்தியர்களை மீட்பதற்கான மாற்றுவழியை மத்திய வெளியுறவு அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

உக்ரைனை ரஷ்யா மூன்று திசைகளில் தாக்கும் நிலையில், எஞ்சியிருக்கும் மேற்கு பகுதியை ஒட்டிய நாடுகளின் உதவியை நாடி தரைவழியாக அந்த நாடுகளுக்கு அழைத்துவந்து அங்கு இந்திய விமானங்களை இயக்கி மாணவர்களை மீட்பதே இப்போதைக்கு ஒரே வழி என்று கூறப்படுகிறது.

விலையேற்றங்கள் எல்லாம் காத்திருந்தே அமலாகின்றனவா? – உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த மாத்திரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலராக உயர்ந்துள்ளது. இது 115 டாலர் வரை உயரலாம் எனக் கணிக்கப்படுகிறது. கரோனாவுக்குப் பின்னர் கச்சா எண்ணெய் விலையேற்றம் செய்யாமல் காத்திருந்த சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள் இதைப் பயன்படுத்தி விலையேற்றுவதாக நிபுணர்கள் கூறுகின்றன. அதேபோல் இந்தியாவில் இன்று தங்கம் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு பவுனுக்கு ரூ.1200-ஐ தாண்டியுள்ளது. இதுவும் தங்கநகை முதலீட்டாளர்கள் தோதாகப் பயன்படுத்திக் கொண்ட தருணம் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். தங்கம் விலையுயர்வு இனி பெரியளவில் சரிய வாய்ப்பில்லை என்றும் சந்தை நிபுணர்கள் கணிக்கின்றனர். அடுத்ததாக சூரியகாந்தி விதைகளில் தயாராகும் சமையல் எண்ணெய்யும் விலை உயரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா, உக்ரைன் மோதல் உலகளவில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் உக்ரைன், ரஷ்யா மட்டுமல்ல ஒட்டுமொத்த ஐரோப்பாவும் இருண்ட நாட்களை எதிர்நோக்கியுள்ளது. துப்பாக்கிகளும், டேங்குகளும் பேசும்போது இதில் வெற்றியாளர்கள் என்று யாருமே இருக்க முடியாது. எல்லோரும் தோற்றுத்தான் போவார்கள். வெற்றியைப் பற்றி பேசுபவர்கள் முட்டாள்கள் என்று சர்வதேச அமைதிக்கான செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.