ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதனால் கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.வரவேற்பு தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவில் கோபுரங்கள் மற்றும் சிவன் அம்பாள் உலாவரும் மாடவீதிகளில் மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. வீதி உலாவிற்கு பயன் படுத்தப்படும் வாகனங்கள் அனைத்தும் சீரமைப்பு செய்து வண்ணம் பூசப்பட்டு உள்ளன. கலை நிகழ்ச்சிகள் நடத்தும் கலை அரங்கம் சீரமைக்கப்பட்டுள்ளது. கோவில் அருகில் கூடுதல் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சொர்ணமுகி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடுவதற்காக கரைகளில் தற்காலிக குளியலறைகள், உடை மாற்றும் அறைகள் கட்டப்பட்டுள்ளன.இதுதவிர பக்தர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
வருகிற 1-ந் தேதி மகா சிவராத்திரியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் விரைவு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மகா சிவராத்திரி அன்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.