காஷ்மீரில் அமையுது சாரதா கோவில்| Dinamalar

சென்னை : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள சாரதா கோவிலுக்கு செல்ல முடியாததால், இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில், புதிய சாரதா கோவில் கட்டப்பட உள்ளது.

இந்திய – பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், நீலம் நதிக் கரையில், அன்னை சாரதாம்பாள் கோவில் உள்ளது. ‘சாரதா பீடம்’ என அழைக்கப்படும் இக்கோவில், 51 சக்தி பீடங்களில் ஒன்று.மிகப் பழமையான இக்கோவில் வளாகத்தில், மிகப்பெரிய வேத பாடசாலை இருந்தது. ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள், சாரதா பீடத்திற்கு வருகை தந்துள்ளனர். சீன பயணி யுவான் சுவான், சாரதா பீடத்தில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்து தத்துவம் பயின்றுள்ளார்.

கடந்த, 1947ல் நடந்த நாட்டின் விடுதலையின்போது, காஷ்மீரின் ஒரு பகுதியை, பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டது. பாகிஸ்தான் ஆக்கிர மித்த காஷ்மீரில், சாரதா கோவில் இருப்பதால், அங்கு பக்தர்கள் செல்ல முடியவில்லை.சாரதா பீடத்திற்கு புனித யாத்திரை மேற்கொள்ள சிறப்பு அனுமதி வேண்டும் என, ஹிந்து பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர்.

இந்த கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், சாரதா கோவிலில் இருந்து, 40 கி.மீ. தொலைவில், இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள, காஷ்மீரின் கிஷன்கங்கா நதிக் கரையில் இருக்கும், ‘டீட்வால்’ என்ற இடத்தில், புதிதாக சாரதா கோவில் கட்டப்பட உள்ளது.

இதற்காக, சாரதா யாத்திரை சர்வக்ஞபீடம் கோவில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி உறுப்பினர்கள் ரவீந்திர பண்டிட், மோகன் மோங்கா, ராகேஷ் கவுல் ஆகியோர், பிப்ரவரி 3-ல், சிருங்கேரி மடத்தின் சங்கராச்சாரியார் பாரதிதீர்த்த சுவாமிகளை சந்தித்தனர்.சாரதா கோவில் கட்ட வழிகாட்டுமாறு வேண்டுகோள் விடுத்தனர். டீட்வால் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அவர்கள் விளக்கினர்.

புதிய சாரதா கோவில் கட்டுமான பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், சிருங்கேரி மடம் செய்து கொடுக்கும்; இந்த கோவிலுக்காக, ஐம்பொன்னால் செய்யப்பட்ட சாரதா தேவி சிலையை அளிக்கும் என்றும், மடத்தின் நிர்வாக அதிகாரி கவுரிசங்கர் தெரிவித்தார்.புதிய சாரதா கோவில் கட்டப்படுவதன் வாயிலாக, காஷ்மீருக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் கனவு நனவாகும் என, சாரதா யாத்திரை சர்வக்ஞபீடம் கோவில் கமிட்டி தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.