கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே துறையூரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கிய 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் கோவில்பட்டி அருகே உள்ள துறையூரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 45 கட்டிடங்கள் உள்ளன. இதில் இன்று ஒரு கட்டிடத்தில் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், சல்பர் ஆகிய 3 ரசாயனங்களைக் கொண்டு, ஃபேன்சி ரக பட்டாசுகள் தயாரிப்பதற்காக குழாயில் மருந்து செலுத்தும் பணி நடந்தது. அப்போது திடீரென அங்கு வெடி விபத்து ஏற்பட்டது.
இதில், அந்தக் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. இதில் சிக்கிய தொழிலாளர்கள் கோவில்பட்டி அருகே ஈராச்சியைச் சேர்ந்த ராமர், பசுவந்தனை அருகே தொட்டம்பட்டியைச் சேர்ந்த ஜெயராஜ் (47), குமாரபுரத்தைச் சேர்ந்த தங்கவேல் (43), கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரைச் சேர்ந்த கண்ணன் (48) ஆகிய 4 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ., காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், டி.எஸ்.பி.உதயசூரியன், கோட்டாட்சியர் சங்கரநாராயணன், வட்டாட்சியர் அமுதா, மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.